/* */

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை, வழிபடவேண்டிய தலங்கள்..!

பூரட்டாதி குருபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதம் கும்பராசியிலும் நான்காவது பாதம் மீனராசியிலும் அமையும்.

HIGHLIGHTS

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை, வழிபடவேண்டிய தலங்கள்..!
X

பூரட்டாதி குருபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதம் கும்பராசியிலும் நான்காவது பாதம் மீனராசியிலும் அமையும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அனைவருடனும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகும் மனம் கொண்டிருப்பீர்கள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்பவர்களாக இருப்பீர்கள். எந்த நிலையிலும் தவறான வழிக்குச் செல்ல மாட்டீர்கள். உணவு சுவையாகவும் தரமாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். எப்போதும் உயர்வான விஷயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்பம் துன்பம் எது வந்தாலும் அதனால் மகிழ்ச்சியோ வருத்தமோ அடையமாட்டீர்கள். எதிர்காலத்தைப் பற்றி தீர்க்கமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகளை அவ்வப் போது சுயமதிப்பீடு செய்துகொள்வீர்கள். மற்றவர்களின் செயல்களையும் விமர்சிப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அமைத்துக்கொள்வீர்கள். உயர்ந்த கல்வியறிவு பெற்றிருப்பீர்கள். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கு வீர்கள். சமூகநலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டீர்கள்.

அடிக்கடி முன்கோபத்தால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பிறகு அதற்காக வருத்தப்படுவீர்கள். பல விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் காணப்படுவீர்கள். யார் என்ன சொன்னாலும் உங்கள் அறிவுக்கு எது சரியெனப்படுகிறதோ அப்படியே நடந்துகொள்வீர்கள். மற்றவர்களின் சொத்துகளுக்கு ஆசைப்பட மாட்டீர்கள். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி சிந்தனையில் மூழ்கிவிடுவீர்கள். உங்களால் யாருக்கும் பிரச்னை ஏற்படக்கூடாது என்று நினைப்பீர்கள். பலதரப்பட்ட அனுபவங்களால் மனமுதிர்ச்சி பெற்றிருப்பீர்கள். அதன் பலனாக மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவீர்கள்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்:

பூரட்டாதி 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - குரு, ராசி அதிபதி - சனி; நவாம்ச அதிபதி - செவ்வாய்.

பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தின் நவாம்ச அதிபதி மேஷ செவ்வாய். இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். வயதில் சிறியவர்களிடம்கூட மரியாதையுடன் பழகுவீர்கள். எல்லோரும் சமாதானமாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். சண்டை சச்சரவு என்றாலே காததூரம் விலகிவிடுவீர்கள். பெற்றோரிடமும் உடன்பிறந்தவர்களிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகப் பாடுபடுவீர்கள். இயற்கையெழிலை ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். நவீனரக ஆடைகளையும் நகைகளையும் அணிவதில் விருப்பம் கொண்டிருப்பீர்கள். ஏமாற்றுவது என்பது உங்களுக்குப் பிடிக்காது. உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுக்கு சம உரிமை கொடுப்பீர்கள். அவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

பூரட்டாதி 2-ம் பாதம் :

நட்சத்திர அதிபதி - குரு; ராசி அதிபதி - சனி, நவாம்ச அதிபதி - சுக்கிரன்

பூரட்டாதி 2-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். அழகும் கம்பீரமுமான தோற்றம் கொண்டிருப்பீர்கள். சுகமாக வாழவேண்டும் என்று விரும்புவீர்கள். பல விஷயங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்குவீர்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு முடிந்த உதவி செய்வீர்கள். உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பீர்கள். எல்லோருடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். பெரியோர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள். படிப்பில் சிறந்து விளங்கு வீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பெரிய பதவிகளை வகிப்பீர்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பீர்கள். குடும்பத்துக்காகப் பாடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பும் கண்டிப்புமாக நடந்துகொள்வீர்கள். உணவு விஷயத்தில் சுவையும் தரமும் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள்.

பூரட்டாதி 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - குரு ராசி அதிபதி - சனி; நவாம்ச அதிபதி - புதன்

பூரட்டாதி 3-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன்.

அன்புக்குக் கட்டுப்படுபவர்களாக இருப்பீர்கள். அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டீர்கள். வாழ்க்கையில் எதிர்ப்படும் போராட்டங்களை எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நினைத்ததைச் சாதித்துவிடுவீர்கள். கேட்பவர்களைக் கட்டிப்போடும் அளவுக்குப் பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். பாரம்பர்யத்தைக் கட்டிக் காப்பாற்றவேண்டும் என்று நினைப்பீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். மற்றவர்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள். அனைவரும் மதிக்கத்தக்கப் பண்பாளர்களாக இருப்பீர்கள். நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறிந்து கெட்டவற்றை விலக்கிவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பீர்கள். பிள்ளைகளுக்கு ஒரு தோழனைப் போல் இருந்து வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருவீர்கள்.

பூரட்டாதி 4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - குரு ராசி அதிபதி - குரு நவாம்ச அதிபதி - சந்திரன்

பூரட்டாதி 4-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். அன்பாகப் பேசி மற்றவர்களின் மனங்களில் இடம் பிடித்துவிடுவீர்கள். நம்முடைய கலாசாரத்துக்கு மதிப்புக் கொடுத்து நடக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களையும் வலியுறுத்துவீர்கள். கலைப் பொருள்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டீர்கள். மற்றவர்கள் போற்றும்படி உயரிய பண்புகளைப் பெற்றிருப்பீர்கள். பெற்றோர்களிடமும் உடன் பிறந்தவர்களிடமும் அன்பாக நடத்துவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். நட்புக்கு மரியாதை தருபவர்கள். மற்றவர்கள் செய்த உதவியை மறக்க மாட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டிருப்பீர்கள். தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். வெளிப்படையாக நடந்து கொள்வீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி அணியவேண்டிய நவரத்தினம் : கனகபுஷ்பராகம்

வழிபடவேண்டிய தலங்கள் : பழநி, திருவலிதாயம் (பாடி)

Updated On: 21 March 2022 4:47 PM GMT

Related News