/* */

பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்தியம்; காரணம் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. கோடீஸ்வர கடவுளுக்கு, மண் சட்டியில் நைவேத்தியம் செய்வதன் காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்தியம்; காரணம் தெரியுமா?
X

திருப்பதி ஏழுமலையான் கோவில் (கோப்பு படம்)

மகிமை நிறைந்த புரட்டாசி மாதம்

தமிழ் மாதங்கள் 12ல் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

கன்னி ராசியில் சூரியன் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.


எமபயம் நீக்க வழிபாடு

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.


மண் சட்டியில் நிவேதனம்

மண் சட்டியில் நிவேதனம் பெருமாள் கோவில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார்.


அன்று கனவில் தோன்றிய பெருமாள்

அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக்கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார்.

அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

Updated On: 2 July 2023 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!