/* */

கோவில் நகரமாம் கும்பகோணத்தில் இத்தனை கோவில்களா?

Kumbakonam Temples List in Tamil-கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 188 கோவில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தந்துள்ளோம்

HIGHLIGHTS

கோவில் நகரமாம் கும்பகோணத்தில் இத்தனை கோவில்களா?
X

கும்பகோணத்தில் உள்ள கோவில்கள்

Kumbakonam Temples List in Tamil-'கோவில் நகரம்' என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில்கள் கும்பேஸ்வரர் ஆலயம், ராமசாமி ஆலயம், உப்பிலியப்பன் கோயில், சாரங்கபாணி ஆலயம், சோமேஸ்வரர் ஆலயம், பட்டீசுவரம் துர்க்கையம்மன் ஆலயம், கம்பஹரேஸ்வரர் ஆலயம் ஆகியவை முக்கியமான கோவில்களாகும்.

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது.. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களின் பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவில் இடம்பெற்றுள்ளது.

இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் விளங்குகிறார். இக்கோவிலின் நடுமையத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னிதியில் ஆதிகும்பேஸ்வரரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.

உப்பிலியப்பன் கோவில்

உப்பிலியப்பன் பெருமாள் என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் ஆலயமான உப்பிலியப்பன் கோவில் இக்கோவிலில் உப்பிலியப்ப சுவாமியின் மனைவியான பூமி தேவிக்கும், அவரது தந்தையான மார்க்கண்டேய முனிவருக்கும் கோவில்கள் உள்ளன. மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் இக்கோவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இக்கோவிலுக்கு சாலை வழியாக எளிதில் செல்லலாம்.

திருநாகேஸ்வரம்

நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும். ஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன..

ஸ்ரீ சாரங்கபாணி ஆலயம்

கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது . 108 திவ்ய தேசங்கள் எனப் படும் 108 வைணவ ஆலயங்களில் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயமும் ஒன்று.

கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்கள் பலவற்றில், முதன்மையானதாக விளங்குகிறது, ஏம முனிவர் என்பவர், முன்பாகத் தோன்றிய மகாவிஷ்ணு, "உனக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நீ கும்பகோணம் சென்று அங்குள்ள அமுதவாவி தீர்த்தத்தில் நீராடி தவம் புரிந்து வா" என்று அருளினார். அதன் படியே ஏம முனிவரும், கும்பகோணம் வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்படி அவர் தவம் இருந்தபோது ஒரு நாள், அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர் மீது, ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து வந்து தன் மகளாக வளர்த்தார். 'கோமளவல்லி' என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், 'திருமாலை மணம் முடிக்க வேண்டும்' என்ற எண்ணத்துடன் தவம் இயற்றத் தொடங்கினாள்.

கோமளவல்லியின் பக்திக்கு மனமிரங்கிய திருமால், ஏம முனிவருக்கு அருளாசி வழங்கியதோடு, கோமளவல்லியையும் மணந்துகொண்டார். இதன் நினைவாகவே இன்றளவும், இந்தக் கோவிலில் தை மாதம் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்.

சோமேஸ்வரர் ஆலயம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் சோமேஸ்வரர் என்னும் வடிவிலும், சொக்கேஸ்வரர் என்னும் பெயரில் வழிபடப்படுகிறார். அம்பாளின் பெயர் சோமசுந்தரி ஆகும்.

இந்து புராணங்களின்படி, அமிர்த கலசம் உடைந்தபொழுது அக்கலசத்திலிருந்து ஒரு துளி வெளிப்பட்டு வளையவடிவில், இங்கு சிதறியதாம். அவ்வாறு சிந்திய அத்துளி விழுந்த இடத்தில்தான் தற்போதுள்ள சோமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளதாம்.

பட்டீசுவரம் துர்கையம்மன்

கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருப்பவர் துர்கையம்மன் ஆவார். துர்கையம்மன் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துர்க்கையம்மனைத் தரிசித்து அருள்பெற்றுச் செல்ல இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

கம்பஹரேஸ்வரர் ஆலயம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வேறு பல கோவில்கள் இருந்தாலும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்தான் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன். அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்..

ராஜகோபால சுவாமி கோவில்

கும்பகோணம் பெரிய கடைத் தெரு பகுதியில் அமைந்திருக்கிறது, ராஜகோபால சுவாமி கோவில். மகாமகம் அன்று, அங்குள்ள குளத்தில் தீர்த்தமாடும் வைணவக் கோவில்களில் இந்தக் கோவிலின் பெருமாளும் ஒருவர். இந்தக் கோவிலில் மூலவராகவும் உற்சவராகவும் ராஜகோபால சுவாமியே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் ருக்மணி, சத்யபாமா, அலமேலுமங்கை, செங்கமலவள்ளி ஆகிய தாயார்களும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். 'கோ' என்பதற்கு 'பசு', 'அரசன்' என்று பொருள். 'பாலன்' என்றால் 'சிறுவன்' என்று அர்த்தம். ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, இங்கு ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார். இத்தல இறைவன், துணைவியரோடு அலங் காரப் பிரியனாக, ராஜ கம்பீரம் பொருந்தியவராக, எண்ணற்ற அணி கலன்களை உடலில் பூட்டியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஆதிவராகப் பெருமாள் கோவில்

வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை வழிபடுவதற்காக, சனகாதி முனிவர்கள் வருகை தந்தனர். அப்போது வைகுண்டத்தில் வாசல் காப்பாளர்களாக இருந்த விஜயன், ஜெயன் ஆகிய இருவரும், முனிவர்களைத் தடுத்தனர். இந்த நிலையில் நாராயணரே, வைகுண்ட வாசலைத் திறந்துகொண்டு வந்து முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவரை தரிசனம் செய்த முனிவர்கள், தங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த ஜெயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். தானே அவர்களுக்கு சாப விமோசனம் அளிப்பதாக நாராயணர் கூறினார்.

உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.

சக்கரபாணி கோவில்

கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக திகழ்வது, சக்கரபாணி திருக்கோவில் ஆகும். இத்தல மூலவர், சக்கர வடிவமான தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தருவதால், 'சக்கரபாணி' என்று பெயர் பெற்றார். எட்டு கரங்களைக் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் இந்த பெருமாளிடம், சங்கு, சக்கரம், வில், கோடரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரை போன்றவை காணப்படுகின்றன. சக்கரபாணி, ருத்ராட்சம் வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால், அவருக்கு சிவபெருமானைப் போல வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.

இத்தல தாயாரான விஜயவல்லியும் நின்ற கோலத்திலேயே அருள்புரிகிறாள். சாரங்கபாணி கோவிலில் இருப்பதைப் போல, இங்கும் தட்சிணாயன வாசல் மற்றும் உத்தராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கின்றன.

ராமசாமி கோவில்

நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், இந்தக் கோவிலை கட்டி எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார். ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடிக்க, சத்ருகணன் சாமரம் வீச, லட்சுமணன், வில் ஏந்திய நிலையில் ராமனின் கட்டளைக்காக காத்திருக்கிறார். ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் வீணை ஏந்தி, ராமாயணத்தை பாராயணம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.

விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.

இது தவிர நாகேஸ்வரன் கோயில், சக்ரபாணி கோயில், காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வர் கோயில், கௌதமேஸ்வர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், திருப்புவனம் கோயில், திருவிடை மருதூர் கோயில், திருப்புறம்பியம் கோயில் இப்படி எக்கச்சக்க கோயில்கள் கும்பகோணம் நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ளன.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?