/* */

தம்பதி ஒற்றுமையை அதிகரிக்க கார்த்திகை சோமவாரம் விரதம்

கணவன் மனைவி ஒற்றுமை, கணவனுக்கு நீண்ட ஆயுள், தீர்க்க சுமங்கலியாக மனைவி உள்ளிட்ட பலன்களை, கார்த்திகை மாத சோமவாரம் விரதம் பக்தர்களுக்கு அளிக்கிறது.

HIGHLIGHTS

தம்பதி ஒற்றுமையை அதிகரிக்க கார்த்திகை சோமவாரம் விரதம்
X

சோமவாரம் விரதம் இருந்தால், தம்பதியர் வாழ்க்கை சிறக்கும்.

இன்றைய நாளின் சிறப்பு

கார்த்திகை முதல் சோமவாரம், பிரதோஷம்.

இன்றைய வழிபாடு

சிவன் கோயில்களில், இன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம்பெறும் பேறு பெற்றான்.

சோமவார விரதம் இருந்தால், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கும். மனைவி, தீர்க்கசுமங்கலியாக வாழ்வார்.

கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்றைய தினம், பெண்கள் அதிகாலையிலேயே நீராடி விரதத்தை தொடங்கினர். இன்றைய தினம் அனைத்து சிவ ஆலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் என்னும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பர். கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவ பெருமானே, பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும், சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சோமவார விரத பலன்

சோமவார விரதம் இருப்பவர்கள், சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருப்பது அவசியம். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில், 16 லட்டுகள் செய்து கோவிலுக்கு கொண்டு போய், நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு விட்டு, ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து, பெரியவர்களுக்கும் கொடுத்து விளக்கு வைக்கும் நேரம் வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல், எல்லோருக்கும் கொடுத்து விட வேண்டும்.

விரத நாளில் யாரிடமும் கோபமாக பேசக்கூடாது. முடிந்த வரை மவுன விரதம் இருப்பது நல்லது. சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை, நிச்சயம் சிவபெருமானே தருவார் என்பது உறுதி. கார்த்திகை மாத சோமவார விரதம் இருப்பவர்கள் சிவன் கோவில் சென்று அங்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். இதன் மூலம் பலன்கள் அதிகரிக்கும்.

குடும்பம் அமைதியாக, நிம்மதியாக வாழ வேண்டும். குறிப்பாக, குடும்ப ஒற்றுமையே, குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி, நிம்மதியை தருகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் இந்த சோமவாரம் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி, நிம்மதி பெருகும். சிவபெருமானே திருப்தி அடையும் ஒரு முக்கிய விரதமாக இருப்பதால், கணவன் மனைவி இருவருமே இந்த விரதம் இருப்பது இன்னும் ஒரு சிறப்பாக அமையும்.

Updated On: 21 Nov 2022 6:22 AM GMT

Related News