/* */

கேரளாவிலும் தலைதூக்கிய வாரிசு அரசியல்..!

கேரளாவைப் பொறுத்தவரை இதுவரை பெரிய அளவில் வாரிசுகள் அரசியலில் பேசப்படவில்லை. தற்போது வாரிசு அரசியல் சூடுபிடித்துள்ளது.

HIGHLIGHTS

கேரளாவிலும் தலைதூக்கிய வாரிசு அரசியல்..!
X

கேரள இளைஞர் அணித் தலைவர் சாண்டி உம்மன்

தெற்கு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு சிறப்பு அந்தஸ்து உண்டு. அதற்குக் காரணம் கேரளாவில் நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டிதான்.. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.

இரண்டு முறை முதல்வராகவும் இருந்த உம்மன்சாண்டி கடந்த ஜூலை 18-ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 8ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி செப்டம்பர் 5ம் தேதி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் களத்தில் இறக்கி விடப்பட்டார். ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் ஏற்கனவே இரண்டு முறை உம்மன்சாண்டியிடம் களத்தை இழந்திருந்த,D Y F I யின் கோட்டயம் மாவட்டத் தலைவரான ஜெய்க்.சி. தாமஸை அந்தக் கூட்டணி பிரதிநிதித்துவப் படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோட்டயம் மாவட்ட தலைவரான விஜின்லால் களமிறங்கினார்.

இடைத்தேர்தல் என்றாலே திருவிழா தான் என்கிற தமிழகத்து மனப்பான்மையிலேயே புதுப்பள்ளியிலும் திருவிழா தொடங்கியது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்பை விட தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியது.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வடக்கு கோட்டயம் மாவட்டத்தில் பெருத்த செல்வாக்கு பெற்ற மறைந்த கே எம் மாணியின் மகனும், கேரள காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜோஸ் கே மாணி உடன் இருப்பது இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு புது தெம்பை கொடுத்திருந்தது.

ஆனாலும் சாண்டி உம்மனின், எளிய வசீகரத்தின் முன் இடதுசாரி ஜனநாயக முன்னணி களத்தை இழந்துவிட்டது. மொத்தம் உள்ள 182 பூத்துக்களில், ஒரு பூத்தில் மட்டுமே இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னிலை பெறும் அளவிற்கு நிலைமை படு மோசமாகிவிட்டிருந்தது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தாமஸின் சொந்த ஊரான மணற்காட்டில் கூட சிபிஎம் பின் தங்கியது. புதுப்பள்ளி தொகுதியில் உள்ள மீனாடம் ஊராட்சியின் புதுவயலில் உள்ள 153 வது பூத்தில்,வெறும் 15 வாக்குகள் மட்டுமே தாமஸ் முன்னிலை பெற்றார். மீதமுள்ள 181 பூத்துக்களிலும் சாண்டி உம்மனே பெரும்பான்மை பெற்றிருக்கிறார்.

கேரள அரசியல் வரலாற்றில் புதுப்பள்ளிக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. வீரிய மிகுந்த அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் திருவிதாங்கூர் சமஸ்தான ராணுவத்தால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த போராளி குஞ்சப்பன். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான, அதாவது செப்டம்பர் 4ம் தேதி புதுப்பள்ளி குஞ்சப்பனின் நினைவு தினமாகும்.

1938ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிலவுடைமை கொள்கைகளுக்கு எதிராக, புதுப்பள்ளியில் காங்கிரஸ் அறிவித்திருந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தான ராணுவத்திற்குமிடையே நடந்த மோதலில் தான் தியாகி குஞ்சப்பன் ராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்த நினைவை போற்றும் வகையில் புதுப்பள்ளி அருகே உள்ள நிலக்கல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் குஞ்சப்பனின் கல்லறையில் செப்டம்பர் 4ம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்துவது உண்டு. நல்லவேளை அதற்கு ஒரு நாள் தள்ளி வாக்குப்பதிவை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

ஒவ்வொரு முறை தன்னுடைய வேட்புனு தாக்கலின் போதும், தியாகி குஞ்சப்பனின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி விட்டே தன்னுடைய பயணத்தை தொடங்குவார் உம்மன் சாண்டி. அதே நடைமுறையை அவருடைய மகனும் பின்பற்றித்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மிகவும் சென்சிட்டிவான அந்த நாளில் புதுப்பள்ளி எங்கும் ஒரு விதமான இறுக்கம் பரவி இருக்கும். நினைவு தினத்திற்கு அடுத்த நாள் தேர்தல் என்பதால் சாண்டி உம்மனுக்கு அதுவும் ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக போய்விட்டது.

வாக்குப்பதிவு எண்ணத் தொடங்கியதும் சாண்டி உம்மனின் அசுர பலத்தை அறிந்த அரசியல் பார்வையாளர்கள், கடந்த 2007ம் ஆண்டு கூத்துபரம்பா சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளரான பி.ஜெயராஜன் தன்னை அடுத்து வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பிரபாகரனை விட 45,377 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அந்தச் சாதனையை சாண்டி உம்மன் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

சாண்டி உம்மன் தன்னை அடுத்து வந்த தாமசை விட 37 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். 37 வயதே ஆன சாண்டி உம்மன், கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வருகிறார்.

சுரேந்திரன் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த பாரதீய ஜனதா கட்சி, கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 11,694. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் இந்த இடைத்தேர்தலில் பெற்றிருக்கும் வாக்கு 6,342.

இடதுசாரிகளும் பலத்த அடியே வாங்கி இருக்கிறார்கள். எளிமையான அரசியல்வாதியாக அறியப்பட்ட உம்மன்சாண்டி கேரள முதல்வராக இருந்த போது தான், கடந்த 2011ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்னை கொந்தளிப்பான சூழலுக்கு சென்றதையும் நினைவில் வையுங்கள்.

கேரளாவில் மிகப்பெரிய அரசியல் ஜாம்பவான்களாக அறியப்பட்ட ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்,ஈ. கே. நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன், கொடியேறி பாலகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் தன்னுடைய மக்களை அரசியலுக்கு முன்னிலைப்படுத்தாத நிலையில், உம்மன்சாண்டி மட்டும் தன்னுடைய மகனை முன்னிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முறை கேரளாவின் முதல்வராக இருந்த திரு.கருணாகரன் தன்னுடைய மகன் முரளிதரணையும், தன்னுடைய மகள் பத்மஜாவையும் அரசியல்வாதியாக்கி அழகு பார்த்து விட்டு சென்ற நிலையில், தோழர் பினராயி கவனமாக ஒரு அரசியல்வாதியான ரியாசுக்கு, தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து, மருமகனை அமைச்சராகவும் ஆக்கிவிட்டிருக்கிறார்.

வாரிசுகளே அரசியலில் முன்னேற முடியும் என்றால், எங்களைப் போன்ற அரசியல் அறிவு பெற்ற சாமானியர்களுக்கு தேர்தல் கனவு என்பது எட்டாக் கனிதானோ என்று அரசியல் கனவில் இருக்கும் சாமானியர்கள் மனதில் இந்த வினா எழாமல் இருக்குமா..??

எப்படி இருப்பினும் புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற சாண்டி உம்மனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.வாழ்த்துகள் தம்பி. என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் வாழ்த்தி இருக்கிறார். நாமும் வாழ்த்துவோம்.

Updated On: 10 Sep 2023 6:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...