/* */

மீண்டும் திமுகவில் மு.க. அழகிரி ? புதுபொறுப்பு வழங்க தலைமை திட்டம்

M.K. Azhagiri Enters Politics Again-தமிழகத்தில் நிலவி வரும் திமுக உட்கட்சிப்பூசல் அதிருப்தி நிர்வாகிகள் உள்ளிட்டோரைச் சமாதானப்படுத்த மு.க. அழகிரிக்கு அசைன்ட்மென்ட் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

HIGHLIGHTS

மீண்டும் திமுகவில்  மு.க. அழகிரி ?  புதுபொறுப்பு வழங்க தலைமை திட்டம்
X

தனது சகோதரர்  ஸ்டாலினைப் பாராட்டி சால்வை அணிவிக்கும் மு.க.அழகிரி  (பழைய  படம்)

M.K. Azhagiri Enters Politics Again-தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்ப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பாக நேரடி சந்திப்பில் ஸ்டாலின் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் தென்மண்டல திமுக தொண்டர்கள் புத்துணர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்து இரண்டு ஆண்டுகளையும் கடந்து சென்றுள்ளது திமுக. இந்த இரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட பிரச்னைகள்.கட்சியின் தலைமைக்கு எதிராக பல கோஷ்டிகள். உட்கட்சிப்பூசல்.. என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக சென்று கொண்டிருப்பதால் இதனையனைத்தும் சரிகட்டும் விதமாக கட்சியில் தன் அண்ணன் மு. க. அழகிரியை மீண்டும் சேர்த்துக்கொண்டால் எதிர்கோஷ்டிகளை அவர் நன்கு அடக்கி ஆள்வார் என்பதால் இந்த முடிவெடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என தெரிய வருகிறது.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி, மு.க.அழகிரி, முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உயிருடன் இருந்தபோதே மு.க.அழகிரி பல்வேறு பிரச்னைகள் காரணமாக கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால் அவரும் கருணாநிதியின் மறைவின் போதும் சரி, அதற்கு பின்னரும் ஒரு சில சலசலப்புகளைச் செய்தாலும் அதன் பின்னர் சப்தமின்றி அமைதியாகவே இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் தனது பெரியப்பாவிடம் ஆசி பெற அவர் மதுரைக்கு அழகிரியின் இல்லத்தில் நேரடியாக சந்தித்து ஆசி பெற்றார். அப்போதே பல பேச்சுகள் அடிபட்டது. பிரிந்த உறவில் மீண்டும் புதுப்பிப்பா? என்பது போல் பேச்சுகள் அடிபட்டநிலையில் தற்போது அதனை மெய்யாக்கும் வகையில் தாயார் தயாளு அம்மாளின் பிறந்த நாளையொட்டி அனைவரும் சென்னையில் ஒன்று கூடி உறவாடிய போது பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க.அழகிரியும் சுமார் ஒருமணிநேரம் பேசியுள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது அழகிரி ஆதரவாளருக்கு சீட் கேட்டபோது திமுக தலைமை தவிர்த்து மதுரை எம்.பி தொகுதியை தனது கூட்டணி கட்சியான சிபிஎம்க்கு ஒதுக்கியது. வெங்கடேசன் எம்பியானார். மேலும் மதுரை துணை மேயர் பதவியும் வெங்கடேசன் சிபாரிசு செய்த நபருக்கே வழங்கப்பட்டதால் மதுரை திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு அது இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை திமுக உட்கட்சிப்பூசலை சமாளிக்கும் விதமாகவும், பாஜவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலும் கட்சியில் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்றால் அதற்கு தகுதியானவர் அழகிரிதான் என்ற நிலைஏற்பட்டதால் இந்த சமரசம் என தெரிய வருகிறது.

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தனது பெரியப்பா மு.க. அழகிரியிடம் ஆசி பெற்ற படம் (கோப்பு படம்)

புதிய பதவி அசைன்ட்மென்ட்

தமிழகத்தில் தற்போது ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும் பல சீனியர் அமைச்சர்களை அவரால் கட்டுப்படுத்த இயலாத நிலையே தொடர்கிறது. ஒரு சில சீனியர் அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டத்தில் குறுநில மன்னர் போல் நடந்துகொள்வதாகவும்,அவரவர்கள் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் என கோஷ்டியை ஏற்படுத்தியும் எம்எல்ஏக்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என வலம் வருவதாகவும் தலைமைக்கு தகவல் சென்றுள்ளது. இதனைக் களையும் வகையில் அண்ணன் மு. க. அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வந்தால் இதுபோன்ற பஞ்சாயத்துகளை அவர் எளிதில் சமாளித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு புதிய பதவி தரப்படுவதுடன் மதுரையில் வளரும் பாஜ வளர்ச்சியைத் தடுக்கவும் அசைன்ட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் சேர்ந்துவிட்டதால் அவரது மகன் தயா அழரிக்கும் வரும் லோக்சபா தேர்தலில் எம்.பி. சீட் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வழங்கப்பட்டுவிட்டால் மதுரை மீண்டும் அழகிரி வசமாவதுடன் தென்மண்டலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளையும் அவர் எளிதில்சமாளித்துவிடுவார் என திமுக தலைமை கணக்கு போடுகிறது.

கட்சியின் மூத்த அமைச்சர்கள் ஒரு சிலரைக் கட்டுப்படுத்த இயலாத நிலையே தொடர்கிறது. மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 50 பேர் உள்ளனராம். அவர்களைக் கண்காணித்து அவர்களைச் சமாதானப்படுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை செய்துதருவது, மற்றும் திமுக கோஷ்டிப்பூசல் எங்கெங்கு உள்ளதோ அங்கு சென்று அதனைச் சரிசெய்து அவர்களைச் சமாதானப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை மு.க . அழகிரிக்கு வழங்கி கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மு.க. அழகிரியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்னைகளையும் வெகு சாதுர்யமாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் அவருக்கு தென்மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதுடன் மத்திய ரசாயனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அனுபவம் மிக்கவர். அழகிரியின் குணம் எப்படி தெரியுமா? அடிமட்டத் தொண்டனையும் அரவணைக்கும் குணம் பெற்றவர். அடிமட்ட தொண்டனும் உயரே வர வேண்டும் என்று நினைப்பவர் என்பதால் தொண்டர்களும் இவரது பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். அதே நேரத்தில் உரிய மரியாதையும் பயமும் நிர்வாகிகளுக்கு அழகிரியிடம் உண்டு என்பதால் பலர் அவரை மீறி ஒன்றும்செய்ய மாட்டார்கள். அதிருப்திகளை அரவணைக்க தகுதியான ஆள் மு.க. அழகிரிதான் என திமுக தலைமை பல ஆண்டுகளுக்கு பின் கணக்கு போட்டுள்ளது.

இதனால்தான் அமெரிக்காவில் தன் மகள் வீட்டில் ஒருமாத காலமாக தங்கியிருந்த இவரை அம்மா பிறந்த நாளில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்து அசைன்ட்மென்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரே கல்லில் மூன்று மாங்காய், அதாவது மதுரை பாஜ வளர்ச்சியைத் தடுப்பது, அதிருப்தி எம்எல்ஏக்களை அரவணைத்து சமாளிப்பது, கட்சித்தலைமையின் பேச்சுக்கு கட்டுப்படாத சீனியர் அமைச்சர்களின் எல்லை மீறலுக்கு கடிவாளம் போடுவது என திமுக தலைமை கணக்கு போட்டு காய் நகர்த்தியுள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் தென்மண்டலத்தில் வெற்றி உறுதியாகிவிடும் எனவும் கணக்கு போட்டுள்ளது தலைமை. அதனை உரிய முறையில் மு.க. அழகிரி கச்சிதமாக காய் நகர்த்தி சாதிப்பார் என்று தான் மீண்டும் தாய்க் கழகத்துடன் இணைத்துள்ளது என்று கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 28 March 2024 4:57 AM GMT

Related News