/* */

உள்ளாட்சி தேர்தல் ஒரு சிறிய கண்ணோட்டம் : அரசியல் இருக்கு; ஆனா இல்லை

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் எப்படி செயல்பட உள்ளன என்பது இங்கு கூறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல் ஒரு சிறிய கண்ணோட்டம் : அரசியல் இருக்கு; ஆனா இல்லை
X

அரசியல் தலைவர்கள்.

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் தற்போது களை கட்டி வருகிறது. வேட்புமனு தாக்கல் ஜரூராக நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சியை தவிர மற்ற கட்சிகளின் நிலை குறித்து இங்கு அலசுகிறோம். அது ஏன் ஆளும் கட்சியை விட்டுவிட்டோம் என்கிற எண்ணம் உங்களுக்கு வரலாம்.

எப்போதுமே ஆளும் கட்சிக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். ஆட்சி அதிகாரம்,அதிகாரிகள் எல்லாம் அவர்கள் கையில் இருக்கிறார்கள். எனவே, திட்டமிடுதல் ஒன்றும் சிரமமான காரியம் அல்ல என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். இன்னொன்று உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளின் பருப்பு வேகாது.

இங்கு ஒரு தனி நபரின் செயல்பாடுகளே மக்களால் தீர்மானிக்கப்படுகிறது. வார்டு மெம்பர் தொடங்கி,ஊராட்சி தலைவர் வரை என்ன செய்தார் என்பதே இங்கு முன்னிலை படுத்தப்படும். ஒருவேளை தேர்தலில் நிற்பவர் புதியவராக இருந்தால் அவர் நல்லவரா? அவரது பின்புலம் என்ன? வசதியை மட்டும் மக்கள் பார்க்கமாட்டார்கள். தேர்தலில் நிற்பவர் நல்ல மனிதரா? சம்பாதிப்பதில் மட்டும் குறியாக இருப்பவரா என்பதையெல்லாம் சீர் தூக்கி பார்ப்பார்கள். இங்கு கட்சி பேதம் இல்லை. அதனால் தான் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சி சின்னம் ஒதுக்குவதில்லை. இருந்தாலும் கூட கட்சிகள் மறைமுக கோதாவில் இறங்குவதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது.

ஆளைப்பார்த்து ஓட்டு :

ஆளைப்பார்த்துதான் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவார்கள். அதனால், கட்சிகளும் இங்கு மறைமுக வலைவிரிக்கும். அதற்கான வேலைகளையும் செய்யும். இதுவும் மக்கள் அறிந்ததே. ஆனாலும் கட்சிக்காரர் என்றாலும் கூட மக்கள் மனதில் நிற்பவராக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

பண விளையாட்டு :

உள்ளாட்சி தேர்தலிலும் பண விளையாட்டு நடப்பது வழக்கம். (அரசியலில் இதெல்லாம் சகஜமுங்க) கிராமங்களுக்கு கோவில் கட்ட பணம் கொடுப்பது, விளையாட்டு திடல் அமைக்க பணம் கொடுப்பது என்று தேர்தலுக்கு முன்னரே கிராமங்களின் மீது தேர்தலில் நிற்பவர்களுக்கு அக்கறை வந்துவிடும். ஆனாலும், உள்ளாட்சி தேர்தலில் ஒருவரது வெற்றியை பணம் மட்டுமே தீர்மானித்து விடாது.

கூட்டணி குழப்பங்கள் :

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணி மிகப்பெரிய சக்தியாக இருந்தது. அவர்கள் ஆட்சியில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். அந்த கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ,தமிழ் மாநில காங்கிரஸ்,பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்,மூவேந்தர் முன்னணிக் கழகம், பசும்பொன் தேசிய கழகம் என பல கட்சிகள் இருந்தன. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பா.ஜ.க பெரிய கட்சிகள்.

கூட்டணிகள் உடைந்தனவா?

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் தனித்து களம் இறங்க தீர்மானித்துள்ளன. அதையே கட்சிகள் விரும்புகின்றன. இதில் பா.ம.க. முந்திக்கொண்டு தனித்து களம் இறங்குவதை அறிவித்துள்ளது. அதே போல பா.ஜ.க வும் தனித்து களம் இறங்குவதையே விரும்புகிறது. பா.ஜ.க அதன் பலத்தை கிராமங்களில் பரிசீலிக்க ஒரு வாய்ப்பாக கருதுகிறது. மேலும் அதிமுகவின் தோல்வியை பா.ம.க மற்றும் பா.ஜ.க கருத்தில் கொண்டுள்ளன என்பதையும் மறுத்துவிட முடியாது.

கலக்கத்தில் அதிமுக :

இதில் அதிமுக மட்டுமே சற்று கலக்கத்தில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, அதிமுகவில் இருந்து பல முக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் விலகி திமுகவில் இணைவது, கூட்டணியில் இருந்த பா.ஜ.க அதிமுகவை எதிர்த்து தனித்த கட்சியாக தமிழகத்தில் உருவாக நினைப்பது என பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால், அதிமுக தலைமையில் கலக்கம் ஏற்பட்டிருப்பதாக கட்சியினரே கூறுகின்றனர். இவையெல்லாம் அதிமுகவை அழிக்க நடத்தப்படும் சதியாக தலைமை நினைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்று கட்சியாக வளர விரும்பும் பா.ஜ.க :

அதிமுகவுக்கு மாற்றாக பா.ஜ.கவை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பதே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அசைன்மெண்ட். அதற்கு உள்ளாட்சி தேர்தல் அவருக்கு ஒரு சர்வேயாக அமையும் என்பது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் எதிர்பார்ப்பு. அதை கருத்தில் கொண்டே அவரது ஒவ்வொரு மூவ்-ம் இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக பா.ஜ.கவை உருவாக்க வேண்டும் என்பதை உறுதியாக ஏற்று அவர் செயல்பட்டு வருவதும் தெரிகிறது.

பா.ம.கவின் ராஜதந்திரம் :

அதேபோலவே, பா.ம.க சமீப காலமாக திமுகவோடு இணக்கமான உறவை வளர்த்து வருவதை அரசியல் பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர். சட்டமன்றத்தில் திமுகவின் திட்டங்களை பா.ம.க எம்.எல்.ஏக்கள் வரவேற்று பேசியது, அதேபோல பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசும் திமுக அறிவித்த பல திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் கூட்டணியில் மாற்றங்கள் வரலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நெருக்கம் டாக்டர் ராமதாஸின் ராஜ தந்திரமா?

உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி பயன்படவில்லை என்றாலும் கூட, கட்சி அனுதாபிகள் விசுவாசத்துடன் பா.ம.க.வை ஆதரித்து தேர்தல் வேலை செய்யலாம். அதனால், உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படலாம். அதற்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தால் சாதகமான சூழல் ஏற்படும் என்பது பா.ம.க. கணக்காக இருக்கலாம். இருப்பினும் பா.ம.கவின் இந்த மாற்றத்தை அரசியல் வட்டாரங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இப்படியாக கூட்டணி இல்லை என்றாலும் கூட கட்சிகளுக்குள் ஒரு தனி மனக்கணக்கு இருக்கவே செய்கிறது.

தனித்து நிற்கும் கட்சிகள் :

கமலின் மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தேமுதிக, சீமானின் நாம் தமிழர், அமமுக என கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்த போட்டிக்கு தயாராகி வருகின்றன. உள்ளாட்சி தேர்தலில் அரசியல் இல்லை;ஆனால் இருக்கிறது. என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On: 16 Sep 2021 11:26 AM GMT

Related News