/* */

எடப்பாடி சறுக்கிய அந்த ஒற்றை புள்ளி!

பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி தோல்வி அடைந்துள்ளார்

HIGHLIGHTS

எடப்பாடி சறுக்கிய அந்த ஒற்றை புள்ளி!
X

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும், பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

தனித்தனியே பொதுக்குழு, செயற்குழுவை கூட்டக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட தனி ஆணையரை நியமிக்க வேண்டும். ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் செல்லாது. பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். ஜுன் 23க்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் இதுவரை நடந்த நீக்கம் சேர்ப்பு செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா என்று வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார் எடப்பாடி. இது ஒருபுறமிருக்க, எடப்பாடி சறுக்கியது எதனால் ? அதிமுகவின் தொண்டர்கள், மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து தரப்பிலும் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடிக்குத்தான் இருக்கிறது. இது உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் தெரியும். அப்படி பெரும்பான்மை ஆதரவு இருந்த நிலையில், மிக சாதுர்யமாக செயல்பட்டு கட்சியை எடப்பாடி கைப்பற்றியிருக்க வேண்டும்.

ஆனால், அவர் அவசர அவசரமாக செயல்பட்டு அதில் கோட்டை விட்டு விட்டார் என்று கூறுகிறார்கள். குறிப்பாக, ஒற்றை தலைமை விவகாரத்தை கட்சியின் சீனியர்களோடு விவாதித்த எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு எதிராக, கோபமூட்டும் வகையில் நடந்திருக்கக் கூடாது. முன்பிருந்தபடியே பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கலாம் என ஓபிஎஸ்சுடன் கலந்து பேசி ஒரு சமூகமான முடிவுக்கு எடப்பாடி திட்டமிட்டிருக்க வேண்டும். இருவரும் கையெழுத்திட்டு பொதுக்குழுவை 15 நாள் நோட்டீஸ் அறிவிப்பு செய்து கூட்டியிருக்க வேண்டும்.

ஆனால் எடப்பாடி அவசரப்பட்டுவிட்டார். பொதுக்குழுவில் ,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க சட்டத்திருத்தம் செய்யலாமா? என கேள்வி கேட்டு பொதுக்குழுவின் ஒப்புதலை பெற முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், இதை செய்யாமல், பொதுக்குழுவை தன்னிச்சையாக கூட்டுவது, அதில் ஓபிஎஸ்சுக்கு எதிராக ரகளை செய்வது, எல்லா தீர்மானத்தையும் ஒரு வரியில் நீக்குவது பிறகு மீண்டும் பொதுக்குழுவின் தேதியை அறிவிப்பது என எல்லாமே கட்சியின் விதிகளின்படி நடக்கவில்லை. இதுதான் எடப்பாடிக்கு முதல் சறுக்கல்.

அதேபோல, தற்போதைய நீதிபதி ஜெயச்சந்திரன் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சட்டவிதிகளை மட்டுமே உன்னிப்பாக கவனிக்கக் கூடியவர்.

பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாள் இடைவெளி இருக்க வேண்டும்; அந்த அறிவிப்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பது விதி. இதனை எடப்பாடி தரப்பு புறக்கணித்து விட்டது. பொதுக்குழுவை அறிவித்ததை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வந்து விட்டது, அதையும் தாண்டி 23-ந்தேதி கூடிய பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு அறிவிப்பை தனியாக அறிவிக்க தேவையில்லை என கருதியது எடப்பாடி தரப்பு.

இந்த பாயிண்ட்டை தான் ஓபிஎஸ் தரப்பு கெட்டியாக பிடித்துக் கொண்டு, கோர்ட்டில் வாதம் செய்தது. எடப்பாடி தரப்பு தனது வாதத்தில், பத்திரிகை தொலைக்காட்சியின் செய்தி வந்துள்ளது; அதுவே போதுமானது என்றும், 23-ந்தேதி பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழு தேதியை அறிவிக்கப்பட்டது என்றும் வாதிட்டது. ஆனால், நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவின் சட்ட விதிகளில் பொதுக்குழுவை கூட்டும் அறிவிப்பு 15 நாள் இடைவெளியில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதைத்தான் அழுத்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சட்டவிதி மீறல்தான் எடப்பாடிக்கு எதிராக போய் ஓபிஎஸ்சுக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. ஆக, கட்சியில் பெரும்பான்மை இருந்தும் தலைமை பொறுப்பை எடப்பாடியால் கைப்பற்ற முடியாமல் போனது. கட்சியின் சட்டவிதிகளை புறக்கணித்து தன்னிச்சையாக சர்வாதிகாரி போல அவசரப்பட்டு பொதுக்குழுவை அறிவித்தது இதற்கு முக்கிய காரணம். ஓபிஎஸ்சுடன் சுமூகமாக பேசி காரியத்தை சாதிக்க தவறவிட்டுவிட்டார் எடப்பாடி.

ஆரம்பத்தில் ஒற்றைத் தலைமைக்கு ஒப்புக்கொள்பவராகத்தான் ஓபிஎஸ் இருந்தார். ஆனால், கட்சியில் அனைத்து நிலைகளிலும் பெரும்பான்மை தனக்கு இருக்கும் துணிச்சல் காரணமாக எடப்பாடிக்கு ஈகோ தலைக்கேறிவிட்டது. அந்த ஈகோதான் ஓபிஎஸ்சிடம் சுமூகமாக செல்ல தடுத்தது. அதுதான் விதிகளுக்கு புறம்பாக செயல்பட வைத்தது. அதை வைத்துதான் போராடினார் ஓபிஎஸ்.

ஆக, சட்டவிதிகள் தான் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக்கியிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். அதிமுகவில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு, எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் கூட எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்துள்ளார்.

Updated On: 18 Aug 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...