/* */

பியூஷ் கோயலை சந்திப்பதை தவிர்த்த அண்ணாமலை: அதிமுக கூட்டணி தொடருமா?

தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களை கவனித்து வரும் பியூஷ் கோயலை அண்ணாமலை சந்திக்காதது பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது

HIGHLIGHTS

பியூஷ் கோயலை சந்திப்பதை தவிர்த்த அண்ணாமலை:  அதிமுக கூட்டணி தொடருமா?
X

பியூஸ் கோயல் மற்றும் அண்ணாமலை 

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்படியான சூழலில் பாஜக மாநில ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கும் போது பலர் அக்கட்சியில் இருந்து விலகி, கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைவது அண்ணாமலையை டென்ஷனாக்கியது. இது குறித்து பேசிய அண்ணாமலை, கட்சியிலிருந்து சிலர் சென்றது நல்லது தான். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என அதிமுகவை சாடியிருந்தார்.

அதேநேரத்தில் அதிமுகவினரும் கடுமையாக பாஜகவை விமர்சித்தனர். பின்னர் ஒருவழியாக மூத்த தலைவர்கள் தலையிட்டு, இந்த கருத்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர். சமீபத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் எனப் பேசியது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கிவிட்டு, அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக டிடிவி தினகரன், சசிகலா மற்றும் சில கட்சிகள் ஒருங்கிணைத்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற திட்டத்தில் அண்ணாமலை இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாஜகவின் மூத்த நிர்வாகிகள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும், இப்போது இதைப் பேசுவது தேவையற்றது என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் தான் தேசிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக டெல்லி சென்றுள்ளார் அண்ணாமலை.

டெல்லி சென்றிருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது அதிமுக கூட்டணி விவகாரம், பாஜகவில் இருந்து கட்சியினர் வெளியேறுவது பற்றியெல்லாம் அண்ணாமலை பேசக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அண்ணாமலை சந்திக்காதது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதலாவதாக பி.எம்.மித்ரா - பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்காவை விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதற்காக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பை அண்ணாமலை திட்டமிட்டே தவிர்த்ததாக பாஜக வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களை பாஜகவின் டெல்லி தலைமை சார்பில் பியூஷ் கோயல் தான் கவனித்து வந்தார். குறிப்பாக, அதிமுக உடனான எல்லா விவகாரங்களையும் பியூஷ் கோயலே கவனித்து வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களிலும் பியூஷ் கோயல் முக்கியப் பங்காற்றினார். இப்போதும் கூட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றால் பியூஷ் கோயலை சந்திப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்தளவுக்கு அதிமுக தலைவர்களை பொறுத்தவரை பாஜக மேலிடத்தின் முகமாக இருப்பவர் பியூஷ் கோயல்.

அப்படிப்பட்ட பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர்கள் விபி துரைசாமி, சக்கரவர்த்தி ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் சென்று வரவேற்றனர். மாநிலத் தலைவரான அண்ணாமலை செல்லவில்லை. பியூஷ் கோயல் கிண்டி அருகே நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது பாஜக நிர்வாகிகள், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போதும் அண்ணாமலை மிஸ்ஸிங்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிஎம் மித்ரா பூங்கா தொடக்க விழாவிலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை. ஆனால், பாஜக மாநில நிர்வாகிகள் சிலர் இந்த விழாவிற்குச் சென்றனர். பின்னர் பியூஷ் கோயல் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குக் கிளம்பும்போது வழியனுப்பவும் அண்ணாமலை வரவில்லை. பாஜகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரும், தமிழ்நாடு அரசியல் நிலை பற்றி நன்கு அறிந்தவருமான பியூஷ் கோயல் உடனான சந்திப்பை அண்ணாமலை தவிர்த்தது பாஜகவினர் மத்தியிலேயே பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக உடனான கூட்டணி தொடர வேண்டும் என்று கருதுபவர். அதிமுக தலைவர்கள் மத்தியில் நல்ல உறவு கொண்டிருப்பவர். அண்ணாமலை, அதிமுகவுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதால், தற்போதைய சூழலில் பியூஷ் கோயலை சந்தித்தால் அதிமுக விவகாரம் பற்றி பேச வேண்டியிருக்கும், பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கப்போகும் நேரத்தில் தேவையில்லாத விவாதம் வேண்டாம் எனக் கருதியதன் காரணமாகவே அவருடனான சந்திப்பை தவிர்த்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Updated On: 24 March 2023 3:53 AM GMT

Related News