/* */

என்எல்சி விவகாரம்: அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாகவும், திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் என அதிமுக அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

என்எல்சி விவகாரம்: அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
X

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. (கோப்பு படம்).

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன் நிலக்கரி சுரங்கமும் நாட்டின் மின்சாரத் தேவைக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனும் முக்கியம். NLC நிறுவனம் துவங்கிய 1956-ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை அதன் வளர்ச்சிக்காக நிலத்தைக் கொடுத்த அந்தப் பகுதி மக்களின் எந்தத் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி புரிந்தபோது NLC நிறுவனம், தனது பங்குகளை தனியாருக்கு விற்க முன்வந்த போது, ஒரு பொதுத் துறை நிறுவனம் தனியார் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் எண்ணத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தப் பங்குகளை தமிழக அரசின் சார்பில் வாங்கினார்.

2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை NLC- இன் விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நிலம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்போ முழுமையாக வழங்காத அவலம் நிலவி வருகிறது.

மேலும் மேலும் பல்வேறு விரிவாக்கப் பணிகளுக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், மக்களின் குறைகளைப் போக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பி அரசின் கவனத்தை ஈர்த்தும், NLC நிர்வாகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், கேளாக் காதினராக நிர்வாகம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று (9.3.2023), கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறைவைத்துவிட்டு, DIG மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல் துறையினரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் NLC நிர்வாகம் ஈடுபட்டதை அதிமுக சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது, NLC நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த 22 மாதகால விடியா ஆட்சியில் NLC-யின் மக்கள் விரோதப் போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கடலூர் மாவட்ட திமுக அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட மக்களையும், விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை தன்னுடைய ஏவல் துறையான காவல் துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சமாகும். மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை NLC நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் NLC விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

தமிழக அமைச்சரும், அதிகாரிகளும் விவசாயிகளை அழைத்து மிரட்டுவதை விட்டுவிட்டு, மத்திய அரசோடும், NLC நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், குழு அமைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையைத் தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்னையிலும் இந்த அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அந்தப் பகுதி மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 10 March 2023 5:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்