/* */

12 ஆயிரம் இனங்கள் கொண்ட எறும்புகள் பற்றி, என்னங்க தெரியும் உங்களுக்கு?

உலகம் முழுவதும், 12 ஆயிரம் எறும்பு இனங்கள் வாழ்கின்றன. பூமி முழுவதும் உள்ள 700 கோடி மக்கள் தொகையில், ஒரு மனிதருக்கு, 285 கோடி என்ற விகிதத்தில் எறும்புகள் வாழ்வதாக, சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

HIGHLIGHTS

12 ஆயிரம் இனங்கள் கொண்ட எறும்புகள் பற்றி, என்னங்க தெரியும் உங்களுக்கு?
X

10 கோடி ஆண்டுகளாக, வாழும் எறும்புகள் பற்றி தெரிந்துகொள்ளுவோம்.

எறும்புகள் உருவத்தில், மிக சிறியவையாக காணப்படுகின்றன. ஆனால், அதன் பணியோ அசாத்தியம் நிறைந்தது. சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவை எறும்புகள். தனது எடையை விட பல மடங்கு கொண்ட இரை அல்லது உணவை தூக்கி செல்லும் ஆற்றல் படைத்தவை. பொதுவாக, ஒரு குழுவாகவே எறும்புகள் வாழ்கின்றன. இவற்றில் ராணி எறும்புகளுக்கு என்று தனி மதிப்பு இருக்கும். எனினும், ஒரு குழுவில் ஒரு ராணி எறும்பே இருக்கும். அதனை சுற்றியே வேலைக்கார எறும்புகள் பணிவிடை செய்யும். எறும்புகளுக்கு கேட்பதற்கு காதுகள் இல்லை. என்ற போதிலும், அதிர்வுகளை கொண்டு அவை புரிந்து செயலாற்றுகின்றன.


மூளையின் அளவை மாற்றி அமைத்து கொள்வது தொடர்பாக, 'இந்தியன் ஜம்பிங் எறும்புகள்' எனப்படும் எறும்பு இனத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்திய ஜம்பிங் எறும்புகள் பற்றிய புதிய ஆராய்ச்சி, அவை முன்னர் அறியப்படாத வியத்தகு மீளக்கூடிய மாற்றங்களுக்கு உட்படுவதை காட்டுகிறது. பெரும்பாலான எறும்பு கூட்டத்திற்கென்று ஒரு முன்னோக்கிய வரிசைமுறை உள்ளது. தொழிலாளர்கள் எறும்பு தேர்வு செய்யும் ராணி எறும்பு அனைத்து முட்டைகளையும் இடுகிறது. ஒரு சில எறும்பு கூட்டத்தில் ஏராளமான ராணிகள் இருக்கும்.

சில எறும்பு கூட்டம் இந்த முறையை ஏற்று கொள்ளும், சில எறும்பு கூட்டம் ராணி எறும்புகளை கொல்ல பார்க்கும். அதே நேரத்தில் எறும்பு கூட்டத்தின் ஒரு பகுதி உணவு, குழந்தை எறும்புகளை பராமரித்தல் உள்ளிட்ட பலவற்றை நிர்வகிக்கிறது. ஆண் எறும்புகளும், ராணிகளும் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். சில எறும்பு கூட்டங்களில் ராணி எறும்புகளின் இறப்பிற்கு பிறகு அந்த எறும்பு கூட்டம் முற்றிலும் அழிந்து விடுகிறது.


போர்செப்ஸ் போன்ற தாடைகள் மற்றும் பெரிய கருப்பு கண்கள் கொண்ட இந்திய ஜம்பிங் எறும்புகள் கூட்டத்தில் நடப்பது வேறு. இந்த எறும்பு காலனிகளில், ராணி எறும்புகள் இறந்தால், வேலைக்கார எறும்புகள் வினோதமான போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் வெற்றி பெறும் எறும்பு தலைமை பொறுப்பை ஏற்று, முட்டைகளை உற்பத்தி செய்பவராக மாறுகிறது. இதன் போது வெற்றிகரமான பெண் எறும்பின் கருப்பைகள் விரிவடைந்து அதன் மூளை 25 சதவீதம் வரை சுருங்குகிறது. இவ்வாறு வேலைக்கார எறும்பு ராணியாக பொறுப்பேற்கும் போது, மூளையின் அளவைக் குறைத்து, கருப்பைகளை விரிவுபடுத்தி சந்ததிகளை பெற்றெடுப்பது தனித்துவமாக கருதப்படுகிறது.

தவிர வேலைக்கார எறும்புக்கு ராணி பொறுப்பு முடிந்தவுடன் (தங்கள் ராணியை மாற்ற எறும்பு கூட்டம் நினைக்கும் போதோ அல்லது போட்டி ஏற்படும் போதோ) தங்கள் உடல்நிலையை இயல்பு நிலைக்கு மாற்றி கொள்ளவும் முடியும். லார்வாக்களின் கட்டத்திலிருந்தே ஒரு எறும்பு ஒரு தொழிலாளி அல்லது ராணியாக செயல்படுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. சரியான ஹார்மோன்கள் மற்றும் நன்கு வளர்க்கப்பட்ட உடலைக் கொண்ட ஒரு எறும்பே போட்டியின் போது ராணியாக தேர்வு செய்யப்படுகிறது. மற்ற எறும்புகள் வேலைக்கார எறும்புகளாக தங்கள் கடமைகளை தொடர்கின்றன.


ராணி எறும்பின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து வாழும் எறும்புகளின் மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது, இந்திய ஜம்பிங் எறும்புகளின் குழுக்கள் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ்வதும் தெரிய வந்துள்ளது.

ஒரு வகை எறும்புகளுக்கு இறக்கைகள் இருக்கும். சில வகை எறும்புகளை, நமது பேச்சுவழக்கில் 'சாமி எறும்புகள்' என்றும் கூறுகிறோம். ஏனெனில், அவை மனிதர்களை கடிப்பதில்லை. ஒருவேளை அவை கடித்தபோதும், வலியும் ஏற்படுவதில்லை. அவை உடல் மேல் ஊர்ந்து சென்றாலும், கூச்சம் மட்டுமே ஏற்படும். ஆனால், சில எறும்புகள் கடிக்கும்போது, தேள் கொட்டியது போன்ற வலி கூட ஏற்படும்.

அமேசான் போன்ற வனப்பகுதியில் வசிக்கும் ஒரு வகை எறும்புகள் துப்பாக்கி தோட்டா தாக்கியது போன்ற வலியை ஏற்படுத்தும். எறும்பு குடும்பத்தில் மிக பெரிய உருவம் கொண்ட, ஓர் அங்குலத்திற்கும் கூடுதலான நீளமுள்ள இந்த எறும்புகள் கடித்த பின் ஏற்படும் வலி, 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும். சகாரா பாலைவனத்தில் வசிக்க கூடிய 'சகாரன் சில்வர்' எனப்படும் எறும்புகள் மிக விரைவாக நடந்து செல்ல கூடியவை. இந்த எறும்பு இனம் வினாடிக்கு 90 செ.மீ. தொலைவை கடந்து சென்று விடும். அப்படியென்றால், மனிதன் ஒரு மணிநேரத்திற்கு 400 மைல்கள் தொலைவை கடந்து செல்வதற்கு இணையான வேகத்துடன் அவை கடந்து செல்ல கூடியவை என அறியப்பட்டுள்ளது.

பூமியில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் மொத்த எடையானது, அனைத்து மனிதர்களின் மொத்த எடையை விட அதிக அளவில் இருக்கும் என்று நீண்டகால கணிப்பொன்று இருந்து வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பூமி முழுவதும் 20 குவாட்ரில்லியன் (1 குவாட்ரில்லியன் என்பது 10ன் அடுக்கு 15க்கு சமம்) எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன என மதிப்பீடு செய்துள்ளனர்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள எறும்புகளின் அடர்த்தியை அளவிட்டு, 489 ஆய்வுகளில் இருந்து கிடைத்த தரவுகளின் தொகுப்பினை கொண்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்டுள்ளது. உலகிலுள்ள எறும்புகளின் ஒட்டுமொத்த கார்பன் எடையளவு 12 மில்லியன் டன்கள் (1 டன் என்பது ஆயிரம் கிலோ) என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது, மனிதர்களின் மொத்த மக்கள் தொகை 700 கோடியாக உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மனிதருக்கும் பூமியில் 285 கோடி எறும்புகள் என்ற விகிதத்தில் அவை உள்ளன. இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான எறும்புகள் நம்மிடையே இருப்பதில் வாழ்கிறது. ஏனெனில், சுற்றுச்சூழலுக்கு அவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.


இந்த எறும்பு இனங்கள் 10 கோடிக்கும் கூடுதலான ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் 12 ஆயிரம் எறும்பு இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

எறும்புகள் மண்ணில் காற்று உட்புகுவதற்கான பணியை செய்வதில் முக்கிய பணியாற்றுகிறது. இதனால் நீர் மற்றும் பிராணவாயு ஆகியவை செடி, கொடிகளின் வேர்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். இந்த எறும்புகள் விதைகளை மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லும். பின்பு, அவற்றின் மேற்புறத்தில் உள்ள 'எலையோசோம்' எனப்படும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பகுதியை உணவாக உட்கொண்டு விடுகிறது. இதனால், அந்த பகுதியில் இருந்து செடிகள் எளிதில் வெளிவந்து வளர்வதற்கு உதவியாக அமைகிறது. செடிகள் இயற்கையாகவே, முளைத்து வெளிவரும் என்றபோதிலும், சில விதைகளில் கடினம் நிறைந்த சதைப்பற்று பகுதிகளை எறும்புகள் உண்டபின்னர், அவை சுலபத்தில் வெளிவருகிறது.

சூழலியல் சமநிலையை எடுத்து கொண்டால், அவற்றை பராமரிப்பதில் எறும்புகளின் பங்கு மகத்துவம் வாய்ந்தது. பல கரிம சேர்ம பொருட்களை எறும்புகள் பரவலாக உட்கொள்கின்றன. இதனால், அவை பல வெவ்வேறு உயிரினங்களுக்கு உணவை வழங்குகின்றன.

இனிமேல், உருவத்தில் மிகச் சிறியதுதானே என, எறும்புகளை மிக சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

Updated On: 26 Sep 2022 6:35 AM GMT

Related News