/* */

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே!’ - இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

‘புதிய பறவை’ படத்துக்காக, பி. சுசீலா பாடிய இந்த பாடல் வரிகளில் வருவதைப் போல, இப்போது சிட்டுக்குருவிகளை நாம் காண்பது என்பது அரிதிலும் அரிதாகி வருகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

HIGHLIGHTS

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே!’ - இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்
X

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் (கோப்பு படம்)

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

உள்ளங்கை அளவு கூட இல்லாத சிட்டுக்குருவி அழகில் மயங்காத மனிதர்கள் யாருமிலலை.ஒரு காலத்தில், நம் கண்முன்னே தன் பட்டுச்சிறகை விரித்து சிட்டாய் பறந்து கொண்டிருக்கும் சிட்டுக்குருவி. மனதை மயக்கும் அந்த காட்சிகளை காண்பது இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது. இந்த சின்னஞ்சிறு பறவையினம், அழிவு பாதையை நோக்கி சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. ஒருகாலத்தில் சிட்டுக்குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தத்தை கேட்டு காலையில் எழும் நாட்கள் உண்மையிலேயே மனதுக்கு உற்சாகம் கொடுத்தது. ஏனென்றால் மற்ற பறவை இனம் போன்று இதனை அவ்வளவு சாதாரணமாக எண்ணி விட முடியாது. மனிதனோடு மனிதனாக பின்னி பிணைந்து நம் குடும்பத்தில் ஒருவராக தான் இந்த சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருகின்றன.


மக்களோடு கலந்த பறவை

நகரம், கிராமம் என எங்கிருந்தாலும் மக்களோடு மக்களாக தான் சிட்டுக்குருவிகள் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறது. மற்ற பறவையினங்கள் போல காடுகளில் தன்னிச்சையாக இது வாழாது. வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டினால் அதை பெரும் பாக்கியமாகதான் பலரும் கருதுகின்றனர். எந்த வீடுகளில் குருவிகள் கூடுகள் கட்டுகிறேதோ அந்த வீட்டின் தலைமுறைகள் வாழையடி, வாழையாக தழைத்தோங்கும் என்பது ஆண்டாண்டு கால நம்பிக்கையாக உள்ளது. இதனால்தான் தங்கள் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் அந்த கூட்டினை யாரும் கலைப்பதில்லை.


பெரும்பாலும் சிட்டுக்குருவிகள் வீடுகளில் உள்ள பரண்கள், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளுக்கு இடையில் கூடுகள் கட்டி வசிக்கும். வீடுகளில் இருப்பவர்களுக்கு அவைகள் எந்த தொந்தரவும் கொடுப்பது இல்லை. இந்த குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தை சேர்ந்தது.

தமிழ்நாட்டில் இவை வீட்டுக்குருவிகள், அடைச்சலாங்குருவிகள், ஊர்க்குருவி, சிட்டுக்குருவிகள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் மனையுறைக்குருவிகள், மற்றும் உள்ளுறைக்குருவி, உள்ளூர் குருவிகள் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளன.


60 சதவீதம் அழிவு

எந்த இடத்தில் இந்த சிட்டுக்குருவிகள் அதிகம் வாழ்கிறதோ அந்த பகுதி ஆரோக்கியமானது என்பது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி மக்களோடு மக்களாக கலந்துரையாடி வாழும் சிட்டுக்குருவியை பற்றி இன்றைய இளையதலை முறையினரிடம் கேட்டால் சரிவர தெரியாது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த பறவையினம் 60 சதவீதம் அழிந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இன்று நகர் மற்றும் மாநகர பகுதிகளில் கான்கரீட் வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த வீடுகளில் வெளிகாற்று உள்ளே வராததால் அனைவரும் இயற்கை காற்றை துறந்து செயற்கையான ஏ.சி. காற்றுக்கு மாறி விட்டனர். இதன்காரணமாக சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டி குஞ்சு பொறிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது. என்றைக்கு செல்போன் பயன்பாட்டுக்கு வந்ததோ அன்றைக்கே இந்த பறவை இனத்துக்கு சிக்கல் வந்து விட்டது. செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்ச கதிரியக்கங்கள் சிட்டுக்குருவியின் கருமுட்டைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை அது முட்டையிட்டாலும் முழு வளர்ச்சி அடைவது இல்லை. இதனால் சிட்டுக்குருவியின் இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. இன்றளவில் நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களிலும் பறவை இனங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது.


சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்

இதனை தடுத்து நிறுத்துவதற்காக தான் இந்த பறவை இனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 20-ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சிட்டுக்குருவிகள்தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசு 2012-ம்ஆண்டு சிட்டுக்குருவிகளை தங்கள் மாநில பறவையாக அறிவித்தது.

இந்த சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் உயிர் வாழ கூடியவை. ஆனால் 5 ஆண்டுகளிலேயே அது தனது வாழ் நாளை முடித்துக்கொள்கிறது. இனியாவது இது போன்ற மகத்துவம் பெற்ற சிட்டுக்குருவியை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர் இனங்களுக்கும் வாழ்வதற்கு உரிமை கொடுத்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து தனது வாழ்வியலை மாற்றிக் கொள்ள வேண்டும்.


ஒரு சில பறவைகள் நல ஆர்வலர்கள் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு நடவடிக்கை யாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், சுந்தரம்- கிளேட்டன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் செயல்பாட்டு பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் சார்பில் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. சிட்டுக்குருவிகள் அதிகம் கூடு கட்டும் கிராமங்களை கண்டறிந்து அந்த கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கில் கூடுகட்டும் பெட்டிகளை இந்த டிரஸ்ட் வழங்கி வருகிறது.

இந்தப் பெட்டிகள் வீடுகளுக்கு வெளியே ஜன்னல்களுக்கு மேற் பகுதியிலோ அல்லது அருகே இருக்கும் உயரமான மேற் கூரைப்பகுதிகளிலோ போதுமான தீவனத்துடன் வைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 100 கிராமங்களுக்கு கூடுகட்டும் பெட்டிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் பெட்டிகள் சிட்டுக்குருவிகளுக்கு பாதுகாப்பான வசிப்பிடமாகவும் இருக்கிறது. அவர்களுடன் நாமும் இணைந்து அந்த பறவையினங்களை அழிவில் இருந்து தடுக்க, இன்றைய சிட்டுக்குருவிகள் தினத்தில் உறுதி கொள்வோம்.


சிட்டுக்குருவிகள் வாழட்டும்

வீடுகளில் கிண்ணங்களில் தானியங்களை நிரப்பி உணவாக வைக்க வேண்டும். பெரியதொட்டிகளில் நீரை நிரப்பி சிட்டுக்குருவிகள் தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும் ஏற்ற வகையில் நீர் தொட்டிகளை அமைக்கலாம். சின்னஞ்சிறு அட்டைப்பெட்டிகளில் வைக்கோலை அடைத்து வைத்து வீட்டு வராண்டா மற்றும் பால்கனி, மரக்கிளைகளில் தொங்கவிடலாம். இந்த கூடுகளை மழை நீர் படாமலும், மற்ற விலங்கினங்கள் தொந்தரவு செய்யாதவாறும் அமைக்க வேண்டும். இப்படி செய்வதால் இந்த பறவை இனங்களைபாதுகாக்கலாம்.

Updated On: 20 March 2023 3:28 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!