/* */

தமிழை உயிருக்கு நேராக மதித்தவர் பாரதிதாசன்..! அவரது வரலாறு அறிவோம்..!

Bharathidasan Valkai Varalaru-பாரதி மீதான தீவிரக் காதலால் கனகசுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

HIGHLIGHTS

Bharathidasan Valkai Varalaru
X

Bharathidasan Valkai Varalaru

Bharathidasan Valkai Varalaru-இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ் தழைத்து வளரவும் தமிழின் பெருமை நீடித்து நிலைக்கவும், தமிழகம் செழிக்கவும் எண்ணற்ற பாடல்களை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் மீது அதீத பற்றுக் கொண்ட இவர் தமிழை வளர்க்க பாடுபட்ட மனிதர்களில் ஒருவர். அதனால் இவர் பாவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் புரட்சிக் கவிஞராக விளங்கினார்.

புரட்சிக்கவி என்று பெரும்பாலும் அறியப்படும் இவர் தமிழுக்குத் தொண்டாற்றிய பெரும் கவிஞர். இவர் கவிஞராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். .

இவர் மீசைக்கவி பாரதி மீது கொண்ட அதீத பற்றாலும் அவர் மீது கொண்ட அன்பினாலும் தனது பெயரினை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

அவரது இயற்பெயர் சுப்புரத்தினம் (கனக சுப்புரத்தினம்)

புனைப்பெயர்: பாரதிதாசன்

பிறப்பு: ஏப்ரல் 29, 1891

பிறப்பிடம்: புதுவை

பெற்றோர்: கனகசபை முதலியார் – இலக்குமி அம்மாள்

துணைவி: பழநி அம்மையார்

இறப்பு: ஏப்ரல் 21, 1964

பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பாரதிதாசன், புதுவையில் ஒரு மிகப் பெரிய செல்வந்தரான கனக சபைக்கும்- இலக்குமி அம்மாளுக்கும் மகனாக 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி பிறந்தார்.

இவரது இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இவர் தந்தையின் மீது கொண்ட அன்பினால் தந்தையின் பெயரின் முதற் பாதியைத் தன்னுடைய பெயரில் இணைத்து கனகசுப்புரத்தினம் என்று அழைத்துக் கொண்டார்.

தொடக்கக் காலத்தில் "திருப்பொழிச்சாமி" என்பவரிடம் ஆரம்ப கல்வியினை பயின்றார். மகாவித்துவான் பெரியசாமி புலவர் என்பவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். ஆரம்பக் கல்வியை பிரெஞ்சுப் பள்ளியில் தொடர்ந்தாலும், தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றின் காரணமாக தமிழை முறையாகக் கற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தை பயின்று பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். புலமை மிக்க பாரதிதாசன் 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.


பாரதிதாசன், தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920ம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியினருக்கு சரசுவதி, கண்ணப்பன், வசந்தா, தண்டபாணி, இரமணி, சிவசுப்ரமணியன், மன்னர் மன்னன் ஆகிய குழந்தைகள் பிறந்தனர்.

பாரதிதாசனின் தமிழ்ப் பற்று

பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் என்ற ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும். இது தமிழ் மீது அவர் கொண்டுள்ள அளவுகடந்த காதலை, பற்றினை வெளிப்படுத்துகின்றது.

அன்னைத் தமிழ் மீது அளவில்லாப் பற்றுடையவர் பாரதிதாசனார். இதனாலேயே "தமிழே அவர்; அவரே தமிழ்". "நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்" எனப் பாடினார். தமிழை வானாகவும் தன்னை வெண்ணிலாவாகவும், தமிழை வாளாகவும் தன்னை வீரனாகவும், தமிழை இசையாகவும் தன்னை மகர யாழாகவும், தமிழை ஒளியாகவும் தன்னைக் கண்ணாகவும் குறிப்பிடுகிறார்.


"கனிச்சுருள், கரும்புச்சாறு, வெல்லப்பாகு, இளநீர், பசும்பால் ஆகியவற்றின் சுவையை விடச் சுவைமிக்கது தமிழ்" என்று தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்.

"தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று தமிழ்பற்றை உலகிற்கு பறைசாற்றுகின்றார். தமிழ்பற்று இல்லாதவருக்கும் தமிழ்பற்று உருவாகும் வகையில் இவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன.

தமிழனின் வீரத்தை பறை சாற்ற தமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்தவர பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழரின் வீரப் பரம்பரையத்தை நினைவுபடுத்த விரும்பியே, வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் கவிதைகள் படைத்திருக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விசயராணி காணப்படுகிறாள்.


"பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம் பெருக் கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே" எனும் வரிகளைப் பிறநாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன்.

பாரதிதாசன் படைப்புகள்

பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். இதுதவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் செப்பலோசையில் அமையப்பெற்ற 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

அவரது படைப்புகள் சில :

அம்மைச்சி (நாடகம்)

உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)

உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)

எது பழிப்பு, குயில் (1948)

கடவுளைக் கண்டீர், குயில் (1948)

பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)

பெண்கள் விடுதலை

விடுதலை வேட்கை

வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)

ரஸ்புடீன் (நாடகம்)

கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)⸴ கலை மன்றம் (1955)

கற்புக் காப்பியம், குயில் (1960)

சத்திமுத்தப் புலவர் (நாடகம்)

நீலவண்ணன் புறப்பாடு

அகத்தியன்விட்ட புதுக்கரடி – காவியம் (1948)

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

1946 – அவரது "அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் 'தங்கக் கிளி பரிசு' வென்றார்.

1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது 'பிசிராந்தையார்' நாடகத்திற்காக அவருக்கு 'சாகித்ய அகாடமி விருது' வழங்கப்பட்டது.

2001 – அக்டோபர் மாதம் 9ம் தேதி சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

அறிஞர் அண்ணா, "புரட்சிக்கவிˮ என்ற பட்டமும் பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், "புரட்சி கவிஞர்ˮ என்ற பட்டமும், வழங்கினர்.

தமிழக அரசும் அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு "பாரதிதாசன் விருதினைˮ வழங்கி வருகிறது.


'பாரதிதாசன் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சியில் நிறுவப்பட்டது.

எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன், ஏப்ரல் மாதம் 21ம் தேதி, 1964ம் ஆண்டில் இயற்கை எய்தினார். பாரதிக்குப் பின் தலைசிறந்த கவிஞராக தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் பாவேந்தர் பாரதிதாசன் என்பது வரலாற்று உண்மை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 6:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!