/* */

மீசைக்கவியின் விடுதலை ஆசை..! பாரதி பேச்சுப்போட்டி..!

Speech About Bharathiyar in Tamil-விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார்.

HIGHLIGHTS

மீசைக்கவியின் விடுதலை ஆசை..! பாரதி பேச்சுப்போட்டி..!
X

Speech About Bharathiyar in Tamil-சுப்ரமணிய பாரதியார் தமிழில் கவிபாடும் ஒப்பற்ற கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் அறிவற்று மங்கிக்கிடந்த மக்களுக்கு கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திய வீரக்கவிஞன்.

மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று தமிழைபிப் போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்டக் காலத்தில், இவரது கவிதைகள் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது. அடிமை விலங்கை அறுத்தெறிய போராட்டத்தில் குதிப்பதற்கு பாரதியாரின் கவிதை வரிகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை வேறுபாடுகள் மறந்து ஒருங்கிணைய காரணமாக இருந்தன. அதனால், "தேசிய கவியாக" போற்றப்பட்டார், பாரதியார். அவர் ஒரு புரட்சி வீரன். வறுமையிலும் வீறுகொண்டு எழுந்தவன். அவரது வாழ்க்கை வரலாற்றை தானாம் அறிந்துகொள்வது அவசியம்.


பிறப்பு

சுப்ரமணிய பாரதி, சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882ம் ஆண்டு,திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்த போது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர் இவருக்கு "பாரதி" என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் "சுப்பிரமணிய பாரதி" என அழைக்கப்பெற்றார்.

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897ம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலைகுத் தள்ளப்பட்டார். சிறிது காலம் காசிக்குச் சென்று தங்கியிருந்தார். பின்னர் எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.


பாரதியாரின் இலக்கிய பணி

'மீசைக் கவிஞன்' என்றும் 'முண்டாசுக் கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் அவரை இன்றளவும் போற்றி வருகிறது. பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். 'கண்ணன்பாட்டு', 'குயில்பாட்டு', 'பாஞ்சாலி சபதம்',' புதிய ஆத்திச்சூடி' போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப்போராட்டத்தில் , பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீறுகொள்ளச் செய்தது. பாரதியாரின் பாடல்களைக்கேட்டால் மக்கள் நாட்டின்மீது பெற்றுக்கொண்டு வெள்ளையருக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.

அழகியல் உணர்வும் தத்துவச் சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் பாரதி. தேசியக் கவி என்ற முறையிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு சிறப்பு பெற்றவராக இருந்தார். அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவிஞர்களில் இவர் சிறந்தவராக பலர் கருதுகின்றனர்.

"தேடிச் சோறு நிதந் தின்று

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"

என்று வீரம் செறிந்த கவிதையே இவரின் ஆற்றலை வெளிப்படுத்தும்.


பாரதியார், முதலில் நவம்பர் 1904ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழிலும், சூரியோதயம் (1910), கர்மயோகி (டிசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது. மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.

பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி "இந்தியா பத்திரிக்கைக்கு" தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி "தேசிய கவியாக" அனைவராலும் போற்றப்பட்டார்.

இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்.

பாரதியார் நினைவிடங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடங்களை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி, இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது.

இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், 'கவி', 'மானுடம் பாடவந்த மாகவி', 'புது நெறி காட்டிய புலவன்', எண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்', 'பல்துறை அறிஞர்', 'புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்', 'தமிழின் கவிதை' மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள் கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையானது அல்ல.

பாரதியின் கனவு :

மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதி பேருவகை கொண்டவர்.

தன்னுடைய தாய்நாட்டை எண்ணிப் பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்,பாரதி.

"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்று பற்றுடன் பாடிய பாரதி, பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்கிறார் மறுபுறம். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர், பாரதி.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 3:48 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்