/* */

பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத் டூ டில்லி வரை

குஜராத் மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக வளர்ந்து நிற்கும் பிரதமர் மோடி பிறந்தநாள் தொகுப்பு குறித்து இங்கு காணலாம்.

HIGHLIGHTS

பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத் டூ டில்லி  வரை
X

பைல் படம்.

நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று பிறந்தார். குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகர் என்ற ஊர் தான் மோடியின் சொந்த ஊர். இவரது தந்தையின் பெயர் தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, தாயாரின் பெயர் ஹீராபென். மோடியின் முழுப்பெயர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி என்பதாகும். மோடிக்கு 6 உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர்.

இளம் வயதில் மோடியும், அவரது சகோதரர்களும் வத்நகரில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வியை வத்நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து முடித்தார் மோடி. பள்ளி மாணவனாக இருக்கும் போதே பேச்சுப்போட்டிகள், விவாதங்கள் பலவற்றில் கலந்து கொண்டு தனது பேச்சாற்றலை வளர்த்து சிறந்த பேச்சாளனாக விளங்கினார் அவர். மோடி தனது சகோதரர்களோடு இணைந்து நடத்திய டீக்கடைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் பலர் அடிக்கடி வருவது வழக்கமாக இருந்தது. இதனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைகளின் மீது ஈர்ப்பும் மோடிக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டது. இதனால் 1958 ஆம் ஆண்டு 8 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொண்டரானார் நரேந்திர மோடி.

சிறுவயதிலேயே மோடியின் பெற்றோர் நிர்பந்தித்து யசோதா பென் மோடி என்பவருடன் நரேந்திர மோடிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் மோடிக்கு திருமண வாழ்க்கையில் கொஞ்சம்கூட நாட்டமில்லை. அவரது எண்ணமெல்லாம் தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்பதிலேயே இருந்தது. இதனால் மோடி தனது வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு இமயமலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மோடி பயணித்தார்.

1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் நரேந்திர மோடி. கல்லூரிப்படிப்பை படித்து முடித்த பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார் மோடி.

பிறகு சங்பரிவார் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சங்பரிவார் இயக்கத்தின் மாணவர் பிரிவான 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' -ன் குஜராத் மாநில பொருப்பாளராக பதவி வகித்தார் நரேந்திர மோடி. இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தபோது, அதனை எதிர்த்து மோடி பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் பல முன்னணி தலைவர்களின் நெருங்கிய தொடர்பு மோடிக்கு கிடைத்தது.

1985 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. பாரதிய ஜனதாவில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார் மோடி. 1987ஆம் ஆண்டு குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் பல முக்கிய பொறுப்புகள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் மோடி. இதனால் கட்சியின் பல முக்கியப் பதவிகள் மோடிக்கு வழங்கப்பட்டன. 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பான 'தேசிய செயலாளர்' பொறுப்பு நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றார். பிப்ரவரி 7 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட கலவரங்களை அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதனால் மோடி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் சட்டமன்றத்தையும் கலைத்து புதிய சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலில் மோடி பெருவாரியான மக்களின் ஆதரவோடு மீண்டும் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரானார்.

விவசாயம், மின்சாரம், தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு என முதல்வராக சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மக்களின் பேராதரவோடு பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் முதல்வரானார் நரேந்திர மோடி. அப்போதும் சிறப்பாக பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று அசைக்க முடியாத ஆளுமையாக மாறினார் மோடி. இதனால் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சர் ஆகினார் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி. பல்வேறு நலத்திட்டங்களை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேசப்பட்டார் நரேந்திர மோடி. குறிப்பாக மின்சாரத் துறை, வேளாண்மை துறை உள்ளிட்டவற்றின் வளர்ச்சியில் மோடியின் சாதனைகள் நாடு முழுவதும் பேசப்பட்டன.

நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சியிலும், பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்கிட்டியதை அங்கீகரிக்கும் விதத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாரதத் திருநாட்டின் பிரதமராக 2014 மே 26 அன்று பொறுப்பேற்றார்.

நரேந்திர தாமோதரதாஸ் மோடி. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான நட்புறவை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார் மோடி. 5 ஆண்டுகள் சிறப்பாக மக்கள் பணியாற்றிய பிரதமர் நரேந்திர மோடியை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறச் செய்து இந்திய மக்கள் மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆக்கினர். மக்களின் பேராதரவுடன் இந்தியாவின் வளர்ச்சிக்காக தற்போது செயல்பட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சாதாரண ஒரு டீக்கடை நடத்தி வந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற ஒருவர் இன்றைக்கு நம் பாரதத் திருநாட்டில் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது கடின உழைப்பும், தேசத்தின் மீது அவர் கொண்ட பக்தியும், மக்களுக்காக அவர் ஆற்றிய ஆகச்சிறந்த தன்னலமற்ற தொண்டுகளும் தான் காரணம். பலதரப்பட்ட துறைகளை சார்ந்த பல இந்திய இளைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி நம்பிக்கைக்கும், கடின உழைப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.

Updated On: 17 Sep 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?