/* */

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக மே நடைபெறுகிறது. மே 13 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

HIGHLIGHTS

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
X

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் ஏப்.13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.21-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.24-ம் தேதி கடைசி நாள்.

கர்நாடகாவில் 2.62 கோடி ஆண்கள், 2.59 கோடி பெண்கள், 42,756 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்ற‌னர். மாற்றுத் திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 12.15 லட்சம். 100 வயதை கடந்த வாக்காளர்கள் 16,976 பேர் உள்ளனர். 58,282 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நேரில் வர இயலாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தவர்கள், பழங்குடியினர் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்க பல ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டிலிருந்து கர்நாடகாவில் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 9.17 லட்சம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் அனைவரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.

மாநிலத்தில் பதட்டமான, முக்கிய சாவடிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கர்நாடகாவில் 58,282 வாக்குச் சாவடிகள் உள்ளன, அவற்றில் 20,866 நகர்ப்புறங்களில் உள்ளன. ஒரு வாக்குச் சாவடிக்கு சராசரியாக 883 வாக்காளர்கள் உள்ளனர். அடையாளம் காணப்பட்ட அனைத்து முக்கியச் சாவடிகளிலும், நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம். பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க உள்ளோம். 240 மாதிரி வாக்குச் சாவடிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பசுமைச் சாவடிகளாக மாற்றப்படும். 100 சாவடிகள் முற்றிலும் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும்" என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து கேட்டபோது, "வெற்றிடம்" நிரப்பப்பட வேண்டும் என்பது கமிஷனுக்கு தெரியும் என்று கூறினார்.

ஆம்ஆத்மி கட்சியின் தேசியக் கட்சி அந்தஸ்து குறித்த கேள்விக்கு, அதன் நிலை ஆணையத்தால் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதால், வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் காத்திருக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்..

இது குறித்து அவர் கூறியதாவது: ஒரு தொகுதி காலியான பிறகு இடைத்தேர்தலை நடத்த எங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் உள்ளது. விசாரணை நீதிமன்றம் நீதித்துறை தீர்வுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, நாங்கள் காத்திருப்போம்," என்று கூறினார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளன. காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் பாஜக - காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெறுவதால், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 30 March 2023 4:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி