/* */

சீனாவில் மீண்டும் வேகமெடுக்குது கொரோனா: பள்ளிகளை இழுத்து மூட உத்தரவு!

சீனாவில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

சீனாவில் மீண்டும் வேகமெடுக்குது கொரோனா: பள்ளிகளை இழுத்து மூட உத்தரவு!
X

சீனாவில், கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருவது, உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடக்கடவுளே... மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா...? என்ற பீதியை ஏற்படுத்தும் விதமாக, சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, பள்ளிகளை இழுத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. எனினும் கொரோனா தொற்று முற்றிலும் மக்களை விட்டு நீங்கவில்லை. இன்னும் தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தொடரவே செய்கிறது. எனினும், பாதிப்பு எண்ணிக்கை மிக சொற்பமாக இருப்பதால், மக்கள் மத்தியில் பீதி குறைந்துவிட்டது. அரசு தரப்பிலும் சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், 10 சதவீத பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவினாலே கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு விடும். அதன்படி, கொரோனா பரவல் அதிகம் உள்ள மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 18 லட்சம் பேர் வசிக்கும் குவாங்சோ மாவட்டத்தில், கொரோனா பரவல் அதி வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக வீட்டை விட்டு பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், கொரோனா அச்சம் காரணமாக, பள்ளிகளை மூடும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. பஸ் சேவை, விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சீனாவுக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் காலம், 7 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 11,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 10,351 பேருக்கு அறிகுறி இல்லாத பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சீனாவில் துவங்கிய கொரோனா தொற்று, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவியதால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா தொற்று பரவல், சீனாவில் வேகமெடுத்து வருவது உலக நாடுகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 14 Nov 2022 4:04 AM GMT

Related News