/* */

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 7பேர் பலி: ராணுவ தலைமைத்தளபதி கதிஎன்ன?

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த முப்படை தலைமை தளபதி ராவத் உள்ளிட்ட 14 பேரில் நிலை தெரியவில்லை.

HIGHLIGHTS

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 7பேர் பலி: ராணுவ தலைமைத்தளபதி கதிஎன்ன?
X

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் பகுதிக்கு புறப்பட்டுள்ளது. இதில், ராணுவ முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மது லிக்கா, மகள் உள்பட, 14, பேர் பயணித்ததாக தெரிகிறது.


ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் தீயில் கருகிய நிலையில் காணப்படுகிறது.

ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில், பகல் 12.20. மணியளவில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. பலத்த சத்தத்துடன், தீப்பிழம்பாக தரையில் விழுந்து ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் பயணித்தவர்கள், தீயில் கருகினர்.


ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவரின் உடல்.
இவர்களில் இதுவரை, ஏழு பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ராணுவ தலைமைத்தளபதி விபின் ராவத் கதி என்ன என்பது தெரியாத நிலையில், கருகிய உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் எல்.எஸ்.லிட்டர் ஹர்ஜிந்தர் சிங், பாதுகாவலர்கள் குர்சேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, சத்பால் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.


விரைந்தது மருத்துவக்குழு
விபத்து நடந்த இடத்திற்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுடன் மத்திய அரசும், ராணுவ வட்டாரங்களும் தொடர்பில் இருந்து வருகின்றனர். விபத்துக்குள்ளானது, Mi 17 v5, ரக ஹெலிகாப்டர் ஆகும். இது, ரஷ்ய நாட்டின் தயாரிப்பாகும்.

எரிந்து கொண்டிருக்கும் ராணுவ ஹெலிகாப்டரின் பாகங்கள்.

சம்பவப்பகுதிக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு உடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், மீட்பு நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


பிரதமர், முதல்வர் அவசர ஆலோசனை

இதனிடையே, முப்படை தலைமைத்தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து அதிர்ச்சியடைந்துள்ள பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், இது தொடர்பாக டெல்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீயில் எரிந்து சாம்பலான ஹெலிகாப்டர்.

ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி சென்றதாக கூறப்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், சதி ஏதேனும் உள்ளதா, அல்லது வானிலை, தொழில் நுட்பப்பிரச்சனை போன்ற காரணங்களால் விபத்து நேர்ந்துள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 9 Dec 2021 2:48 AM GMT

Related News