/* */

மனசே..! மனசே..! தன்னம்பிக்கை தொடர்-7 'திட்டமிடல் அவசியம்'

Self Motivation in Tamil - நாம் வாழ்க்கையில் செய்யக்கூடிய எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு திட்டமிடல் என்பது அவசியம் தேவை.

HIGHLIGHTS

மனசே..! மனசே..! தன்னம்பிக்கை தொடர்-7   திட்டமிடல் அவசியம்
X

Self Motivation in Tamil - நம் வாழ்க்கையி்ன் அனைத்துசெயல்பாடுகளுமே மனதை மையமாக வைத்தேநடக்கின்றன. ''மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்'' அந்த வகையில் நம் மனமானது என்ன நிலையில் உள்ளதோ அதுபோல்தான் வாழ்க்கையும்.

நாம் வலியவன் என நினைத்தால் நீங்கள் வலியவன் தான். அதுவே நம்மால் இது முடியாது என்று நினைத்தால் அது முடியாதது தான். ஒரு செயலை வெற்றி பெற செய்ய வேண்டுமானால் அதற்கு உங்களுடைய மனதின் முழு ஒத்துழைப்பு தேவை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, முன்திட்டமிடல், உள்ளிட்ட காரணிகள்தான் ஒரு செயலை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கின்றன. திட்டமிடாத காரியம் எதுவும் சக்ஸஸ் ஆனதில்லை.

திட்டமிடல் அவசியம்

வாழ்க்கையில் நாம் எந்த ஒரு செயலை செய்ய துவங்கினாலும் அதுகுறித்து திட்டமிடல் என்பது அவசியம் தேவையான ஒன்றாகும். திட்டமிடாத செயல்கள் வெற்றியை பெறுவதில்லை. அது வாழ்வின் எந்த செயலாக இருந்தாலும் சரி. படிப்பு, வேலை, சொந்த தொழில், திருமணம், வீடுகட்டுதல், பிசினஸ் பார்ட்னர் ஷிப், என எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதுகுறித்த முன் ஆலோசனை அவசியம் தேவை.


அதனைப்பற்றிதிட்டமிடும்போதுதான் இது எப்படி வளர்ச்சியடையும். இதனால் நாம் என்னென்ன பிரச்னைகளை சந்திப்போம். இதுபோன்ற பிரச்னைகள் வந்தால் எப்படி சமாளிப்பது? இதனால் நமக்கு எவ்வளவு வருமானம் வரும்? இதற்கான நிர்வாக செலவு எவ்வளவு? நமக்கு நாலு காசு மிஞ்சுமா?- என்பன போன்ற ஏன்? கேள்விகள் நம் மனதில் ஆயிரம் எழுந்தால்தான் ஓ...இதில் இவ்வளவு பிரச்னை உள்ளதா? என்பது நமக்கு ஆத்மார்த்தமாக தெரியும். எதையும் தெரியாமல் காலை விட்டு விட்டு பின்னர் விழி பிதுங்கி நின்று பயனில்லை.

படிப்புக்குத் திட்டமிடல் தேவை

உதாரணமாக படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் என்றால் மற்ற மாணவர்களை விட இவர்கள் கவனம் அதிகம் படிப்பில் இருக்க வேண்டும். என்ன பெரிய படிப்பு? என இறுமாப்போடு சுற்றிவிட்டு பின்னர் கடைசி நேரத்தில் உட்கார்ந்து படித்தால் உங்களுக்கு கண்ணை கட்டி காட்டில்விட்டது போல் ஆகிவிடும். அதுவும் இப்போதுள்ள கேள்வித்தாள்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கே புதிராக உள்ளது? பிறகு மாணவர்களுக்கு எப்படிஇருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் பொதுத்தேர்வு எழுதுபவர்களாக இருந்தால் கிட்டத்தட்ட 10 முறையாவதுஅந்த வினா விடையை படித்திருந்தால்தான் உங்களால் எந்த வித தயக்கமும் இன்றி சரளமாக தேர்வில் எழுத முடியும். அதைவிடுத்து தேர்வுக்கு ஒரு வாரம் முன்னர்தான்நீங்கள் புதியதாக படித்தீர்கள் என்றால் அது மிகவும் கஷ்டமாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக படிப்பதற்கு கூடநாம் முன் திட்டமிட்டால்தான் முடியும்.

அடுத்த உதாரணம் சாப்பாடு எடுத்து கொள்வோம் . உங்கள் வீட்டில் அம்மா நாளை காலை பள்ளி, கல்லுாரி , ஆபீஸ் உள்ளது. இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு பேக் செய்து தரவேண்டும் என்றால் ஒரு நாள் முன்னதாக என்ன செய்யலாம் என அவருடைய மனதில் திட்டமிட்டு வைத்திருந்தால்தான் காலையில் பரபரப்பில் சீக்கிரம் செய்து அந்த நேரத்திற்குள் உங்கள் அனைவரையும் அனுப்ப முடியும். அதனை விடுத்து காலையில் எழுந்து காய்கறிகளை தேடினால் என்ன ஆகும் நிலை? யோசித்து பாருங்கள்... எதற்கும் ஃப்ரீ பிளானிங் என்பது அவசியமான ஒன்று.

திட்டமிடாமல் செயல்படும் செயல்கள் அனைத்தும் நங்கூரம் இல்லாத கப்பல் போன்றது. என்ன வேண்டுமானாலும் நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே முன்னரே திட்டமிட்டதால்தான் இன்றளவில் ஜெயித்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றி என்பது சாதாரணமாக பெற்று விட முடியாது. முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கு , திட்டமிடல் என்பன அனைத்தும் வெற்றியின் காரணிகள் . இவையனைத்தும் நமக்கு சாதகமாக அமைந்தால்தான் வெற்றி காற்று நம் பக்கம் வீசும். எனவே எந்த ஒரு காரியத்துக்கும் முன்திட்டமிடுங்கள்...முன்னேற்றம் கிட்டும்.

(இன்னும் வளரும்...)

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 Aug 2022 9:09 AM GMT

Related News