positive thinking motivational stories in tamil-4வது பிள்ளை..! (சிறுகதை) தன்னம்பிக்கை கதை..!

positive thinking motivational stories in tamil-தன்னம்பிக்கை என்பது ஒரு சிறு தீப்பொறி. பற்றிக்கொண்டால் போதும். சீறி எழும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
positive thinking motivational stories in tamil-4வது பிள்ளை..! (சிறுகதை) தன்னம்பிக்கை கதை..!
X

தன்னம்பிக்கை என்பது சில நேரங்களில் உள்ளுக்குள் இருக்கும். ஆனால் வெளிப்படாது. வேறு ஒருவர் தூண்டினால் அது பற்றிக்கொள்ளும். அதேபோலத்தான் இந்த சிறு கதையும். நீங்கள் ரசிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தன்னம்பிக்கை சிறுகதை. வாசியுங்கள்...வாழ்த்துங்கள்.

4வது பிள்ளை..! (சிறுகதை) க.சு.பூங்குன்றன்.


அன்று திருப்பாட்டூர் கிராமத்தில் உள்ள இடைநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா. அந்த முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள ஒரு முக்கியமான விஐபி, பிசினஸ்மேன் கலந்துகொள்கிறார் என்று அவரது உருவப்படம் போட்டு பெரிய கட் அவுட் வைத்திருந்தனர். ஆனால், ஆள் பார்ப்பதற்கு சின்ன வயதாகத்தான் தெரிகிறார். அதற்குள் பெரிய பிஸ்னஸ்மேனாகி விட்டாரா..என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.


பள்ளிக்கூடத்தில் லவுட் ஸ்பீக்கர் கட்டி, பாட்டுச் சத்தம் ஊர் முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது. பள்ளி மாணவ.மாணவிகள் சீருடையில் இல்லாமல் எல்லோரும் விரும்பிய கலர் கலர் உடைகளில் ஜொலித்தனர். 'எனக்கு இந்த ட்ரெஸ் நல்லா இருக்ககுதாடி?' என்ற வினாக்கள் வேறு மாணவிகள் மத்தியில்.

வழக்கமாக அமைதியாக பாடங்கள் நடக்கும் பள்ளிக்கூடத்தில் இன்று ஒரு திருவிழா போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர்கள் அங்கங்கு கூடி ஏதோ தலைமை ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தனர். மாணவ, மாணவிகள் அந்த அரங்கத்தில் வகுப்பு வாரியாக அமர வைக்கப்பட்டிருந்தனர். மாணவர்களின் பெற்றோரும் ஒருபுறம் அமரவைக்கப்பட்டிருந்தனர்.

நவீன அரங்கு. அரசு பள்ளிக்கூடம் என்று யாராவது சொன்னால் நம்ப முடியாது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அரங்கில் அமர்ந்திருந்த இரண்டு மாணவிகள் பேசியது எம் காதிலும் விழுந்தது. ' நம்ம பள்ளிக்கூடத்துக்கு அழகான கட்டிடம், வகுப்புகளுக்கு மேசை, பெஞ்ச், வகுப்பறையில் மின்விசிறி, டாய்லட், கம்ப்யூட்டர், விளையாட்டு மைதானம் எல்லாமே இன்னிக்கு வர்றார் இல்லை..அவர்தான் செஞ்சு கொடுத்து இருக்கார்டி. எங்க அப்பா, அம்மாவே சொல்றாங்க. அவரை ரொம்பவே சொல்றாங்கடி' என்று அவர்களுக்கு தெரிந்த கதையை பகிர்ந்துகொண்டனர். ஆமாம். அவர்கள் பேசுவது உண்மைதான். அவர்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு பல வசதிகளை அவர் செலவிலேயே செய்து கொடுத்துள்ளார்.


இந்த ஊருக்கு மட்டுமல்லாமல், நம்ம திருச்சி மாவட்டத்தில் உள்ள நிறைய பள்ளிக்கூடங்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்திருக்கிறாராம். பள்ளிக்கூடத்துக்கு என்றால் கேள்விகள் கிடையாது. உடனே செக் கொடுத்துவிடுவாராம். நேரடியாக அந்த பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வேலைகள் நடைபெறுகிறதா என்பதையும் பரிசோதித்துக்கொள்வாராம்.

சரியாக மணி காலை 10மணிக்கு பள்ளிக்குள் வெள்ளை நிற பென்ஸ் கார் நுழைந்தது. காரில் இருந்து கையெடுத்து கும்பிட்டவாறு இறங்கினார், பிசினஸ்மேன் ராமன். வரவேற்புக்கு நின்ற மாணவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். புன்சிரிப்புடன் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராமனுக்கு இருந்தால் ஒரு 27 வயதுதான் இருக்கும்.

மேடை நோக்கி தலைமை ஆசிரியருடன் செல்லும்போது பல ஆண்களும் பெண்களும்

'தம்பி..நல்லா இருக்கீங்களா..' புன்சிரிப்போடு கேட்டனர்.

அதற்கு ராமனும், ' நல்லா இருக்கேன் அம்மா..நல்ல இருக்கேன் ஐயா.." என்று பவ்யமாக பதில் கூறி கும்பிட்டார். இதை மாணவர்கள் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.


'என்னடா..நம்ம ஊர்க்காரங்க எல்லாரும் இவரை தெரிஞ்ச மாதிரி பேசுறாங்க..?' என்ற ஒரு மாணவனின் கேள்விக்கு, ' டேய் அவரு நம்ம ஊருதானாம்டா.. இப்பதான் சென்னைக்கு போய்ட்டாராம்..அங்க ஏதோ துணிக்கடை வச்சி இருக்காராம். ' என்றான் இன்னொரு மாணவன்.

'என்னது..துணிக்கைடையா..?' என்றான் கேள்வி கேட்ட மாணவன்.

'டேய்.. நம்ம ஊரு துக்குனூண்டு கடை மாதிரி நினைச்சியா..? அது பெரிய்ய்ய்ய்ய கடையாம்டா..அதுவும் ஒரு கடை இல்லடா..தமிழ்நாட்டுல எல்லா எடத்திலையும் இருக்காம்..' என்றான் ஆச்ரயமாக.

'அப்டீயா ..இந்த குளு குளு மிசினலாம் வைச்ச கடை..இல்லடா..? என்றான் அந்த மாணவனும் வெள்ளந்தியாக.

.ராமன் மேடையில் ஏறியதும் அவரை தலைமை ஆசிரியர் கௌரவித்தார்.சந்தன மாலை அணிவித்து, பட்டு சால்வை போர்த்தினார். தலை குனிந்து பண்போடு ஏற்றுக்கொண்ட ராமன், தலைமை ஆசிரியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார்,ராமன்.

'எவ்ளோ பெரிய பிசினஸ்மேன். அவர் காலில் விழுந்து கும்பிடறாரே' என்று கூட்டத்தில் பேசிக்கொண்டனர். ஆமாம், அவரிடம் படித்தவர்தானே இந்த ராமன். இன்றைய மாணவர்களுக்குத் தெரியாது. ஆனால், ஆசிரியர்களுக்குத் தெரியும்.

சிறப்பு விருந்தினர் ராமன் பேசத்தொடங்கினார்...

ராமன், அப்போது திருப்பாட்டூர் கிராமத்து இடைநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனது அப்பாவும் அம்மாவும் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினர். ஒரு கூரை வீடுதான் அவர்களது ஒரே சொத்து. மொத்தம் 6 குழந்தைகள் அவர்களுக்கு. 2 அக்கா ஒரு அண்ணன், ஒரு தங்கை, தம்பி என ராமன் 4 வதாக பிறந்த பிள்ளை. அவர்களை வளர்ப்பதற்கே அவர்கள் படாத பாடுபட்டனர்.


மூத்த அக்கா சரஸ்வதி. பேர்தான் சரஸ்வதி. ஆனால், அவளுக்கு படிக்க வசதி இல்லாமல் கடைசி தங்கையையும், தம்பியையும் பார்த்துக்கொள்ளும் வேலைதான், சரஸ்வதி அக்காவுக்கு. 'பாவம் சரஸ்வதி அக்கா.போட்டுக்கொள்ள ஒழுங்கான சட்டை பாவாடை கூட கிடையாது' என்று ராமன் வருந்துவான்.

ராமனது அம்மாவும், அப்பாவும் அவர்களது கடுமையான உழைப்பின் மூலம் பட்டினி இல்லாமல் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டனர். ஆனால், அதைத்தாண்டி எதையும் செய்யமுடியவில்லை. தீபாவளிக்கு மட்டும் புது உடைகள் கிடைக்கும்.அப்புறம் அடுத்த வருஷம்தான்.

அப்பாவும் அம்மாவும் வேலை செய்யும் தோட்டத்து உரிமையாளரின் குழந்தைகளது பழைய சட்டைகள், பாவாடைகள்,ட்ரவுசர்களை அம்மா கேட்டு வாங்கி வந்து தருவார். பழையதாக இருந்தாலும் புதிது போலவே இருக்கும்.

சரஸ்வதி அக்கா பெரும்பாலும் அந்த பழைய பாவாடை சட்டைகளையே போட்டுக்கொள்ளும். மற்றவர்களுக்கு இந்த எண்ணம் வந்ததோ இல்லையோ நமக்குத்தெரியாது. ஆனால், ராமனுக்கு அந்த கவலை அந்த சிறு வயதிலேயே இருந்தது.நம்ம குடும்பத்தை காப்பாத்தணும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் எப்படி என்று அந்த சிறுவனுக்கு அப்போது தெரியவில்லை.

ராமன் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள பிள்ளையாரை நின்று வணங்குவான். 'என் அப்பா, அம்மா, அக்காங்க, அண்ணன், தம்பி, தங்கை என்று தனித்தனியாக கூறி எல்லோரையும் நான் காப்பாத்த ஒரு வழிகாட்டு சாமி' என்று வேண்டிக்கொள்வான்.


அன்றும் தனது வீட்டுக்கு முன்பாக இருந்த இலந்தை மரத்தினடியில் விழுந்த இலந்தை பழங்களை பொருக்கி எடுத்துக் கொண்டிருந்தான். 4ம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு ஹேமா ஓடி வந்து பழங்கள் பெருக்குவதற்கு ராமனுக்கு உதவினாள். எப்போதும் ஹேமா உதவுவது வழக்கம். ஹேமா கொடுத்ததையும் வாங்கி, கால் சட்டைப்பையில் போட்டுகொண்டு ஹேமாவுடன் பள்ளிக்கூடம் புறப்பட்டான். வழியில் பிள்ளையாரையும் மறக்காமல் கும்பிட்டுவிட்டு போனான், ராமன்.

பள்ளிக்கூடம் போனதும்,'டேய், ராமன் வந்துட்டான்..இலந்தை பழம் கொண்டு வருவான்' என்று ராமனுடன் படிக்கும் சிறுவர்கள் ஆட்டம் போட்டனர். ராமன் புத்தகப்பையை வைத்ததும்,' எனக்கு.. எனக்கு..' என்று கையேந்தினர். ஆளாளுக்கு ஒன்று, ரெண்டு என கொடுத்தபோது 8ம் வகுப்பு மாணவன் பன்னீர்செல்வம் 'இந்தா 50 பைசா. எனக்கு இலந்தை பழம் தா'என்றான்.

'தம்பி, தங்கைக்கு தீனி வாங்கிக் கொடுக்கலாம்' என்ற எண்ணம் ராமன் மனதில் 'பளிச்சென' வந்துபோனது. உடனே 50 பைசாவை வாங்கிக்கொண்டு பழங்களை அள்ளிக்கொடுத்தான்.'நாளைக்கு 1 ரூபா தாரேன். நிறைய கொண்டு வா' என்றான், 8ம் வகுப்பு பன்னீர்.

தலையை ஆட்டிய ராமனுக்கு ஒரு புது நம்பிக்கை வந்தது. ஏதோ ஒரு புது வியாபார நூதனமே கிடைத்தது போல இருந்தது. அடுத்தநாள், பன்னீர்செல்வம் அவனுடன் படிக்கும் மற்றவர்களையும் இலந்தை பழம் வாங்க அழைத்து வந்தான். தினமும் இப்படி விற்பனை செய்ததில் குறைந்தது ரூ.20வரை கிடைத்தது. இப்படியாக தினமும், அந்த இலந்தை பழம் சீசன் முடிவதற்குள் குறைந்தது ரூ.500 வரை கிடைத்தது. தம்பி தங்கைக்கு தீனி வாங்கியது போக, மீதியை அக்கா சரஸ்வதியிடம் கொடுத்து வைத்திருந்தான்.


பள்ளி விடுமுறை நாட்களில் அம்மா,அப்பா வேலை செய்யும் தோட்டத்துக்குச் செல்லும் ராமன், அங்கு மரவள்ளிக்கிழங்கு பறித்த பின்னர் சில கிழங்குகள் தப்பி மண்ணுக்குள் இருக்கும். அவைகளைத் தேடிப் பறித்து குறைந்தது 20 கிலோ அளவு அல்லது அதற்கு அதிகமாகவோ கிடைக்கும். அதைக் கொண்டுவந்து

விற்பனை செய்வான். அதில் கிடைக்கும் பணத்தை அக்காவிடம் கொடுப்பான். சரஸ்வதி அக்காதான் அவனது பேங்க். அவளும் தம்பியின் பணத்தை செலவு செய்யாமல் அவ்வளவு பாதுகாப்பாக வைத்திருப்பாள்.

இப்படி அவன் 12ம் வகுப்பு படிக்கும் வரை அவனது வியாபாரம் தொடர்ந்தது. அதுவும் 11,12 படித்த காலங்களில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஐஸ் விற்பனை செய்வான். உள்ளூர் திருவிழா நடக்கும்போது திருவிழா கடையில் சர்பத் போட்டு விற்பனை செய்வான்.

இப்படி பணம் சம்பாதிக்கும் வழியை சிறுவயதிலேயே பன்னீர் என்ற மாணவன் தூண்டியதால் கற்றுக்கொண்டான். 12ம் வகுப்பு முடித்துவிட்டு இனிமேல் படிப்பு வேணாம். ஏதாவது தொழில்தான் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தான்,ராமன். அக்காவிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை எண்ணிப்பார்த்தார்கள். ஆச்சர்யம் ரூ.60ஆயிரம் இருந்தது. ராமனுக்கும், சரஸ்வதிக்கும் நம்பவே முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த 6 வருஷத்தில் சேர்த்தப் பணம்.

அவனது ஆசிரியர் ஒருவர் கூறிய ஒரு நல்ல வழியை பின்பற்ற உடனே முடிவு எடுத்தான்.

'அக்கா ரூ.20ஆயிரம் உன்கிட்டயே இருக்கட்டும். தேவைப்பட்டால் வாங்கிக்கொள்கிறேன்.' என்று ரூ.40ஆயிரத்தை கையில் வைத்துக்கொண்டான்.

அக்காவிடம் தான் செய்யப்போகும் வியாபாரம் குறித்து பேசினான். தம்பி மீது நம்பிக்கை வைத்திருக்கும் அக்கா, அவனுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக்கூறி அவனை வாழ்த்தினாள்.

' நீ கவலை படாதக்கா..நான் நம்ம குடும்பத்தைக் காப்பாத்தறேன்' என்று கூறிய தம்பி ராமனை கட்டித்தழுவி கண்ணீர்விட்டாள், சரஸ்வதி. ' இந்த சின்ன வயசிலேயே எவ்ளோ கஷ்டப்பட்டன்னு எனக்குத் தெரியும் தம்பி. நீ நல்லா வருவே. அது மட்டும் நிஜம். நான் முழுசா அதை நம்பறேன்.' என்று அழுதாள்.

'அக்கா, நான் இருக்கிறேன், உன் தம்பி.எதுக்கு நீ அழகுற..?' என்று கண்ணீரைத் துடைத்துவிட்டான்,ராமன்.

'சரிக்கா, இன்னிக்கு அம்மா,அப்பா வந்ததும் அவங்ககிட்டயும் சொல்லிடுவோம். அம்மா.அப்பாவும் சந்தோசப் படுவாங்கதானே? இவ்ளோ வருஷம் நம்மளை வளர்க்குரத்துக்கு எவ்ளோ கஷ்டப்பட்டுட்டாங்க. கொஞ்ச நாள் போகட்டும். அவங்களையும் நான் சேர்த்து பார்த்துப்பேன்.' என்று கூறும்போதே அவனுக்கு அழுகை வந்தது.

அக்காவுக்குத்தெரியாமல் அதை மறைத்துக்கொண்டான்.


ஆனால், சரஸ்வதி அதை கவனிக்காமல் இல்லை. இருப்பினும் தம்பி ராமனை நினைத்து பெருமைகொண்டாள். சரஸ்வதி ராமனைவிட 6 வயது மூத்தவள். இருந்தாலும் தம்பி ராமன் பெரிய ஆளைப்போல பேசுவதுகண்டு அவளே கலங்கிப்போனாள்.

அன்று மாலை அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்ததும், அக்காவுடன் அமர்ந்து அம்மா,அப்பாவிடம் பேசினான். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், 'பணத்துக்கு என்ன செய்வே, ராமா?', என்றார்கள்.

ராமன் பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டு அக்கா சரஸ்வதி, தம்பி ராமன் சம்பாதித்த பணம் குறித்து கூறினாள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அவர்களால் உதவ முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. இருந்தாலும் மகன் ராமன் வளர்ந்தவிதம் அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் இவ்வளவு பணம் வைத்திருப்பான் என்று அவர்கள் நினைக்கவில்லை. அன்றைய நாள் அந்த குடும்பத்திற்கு ஒரு நல்ல நாளாக இருந்தது. வீட்டில் மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் இருந்தது.

குடும்பத்தில் நிலவிய அந்த மகிழ்ச்சி ராமனுக்கு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆமாம், அந்த மகிழ்ச்சியை நிரந்தரமாக்க அவன் உறுதி எடுத்துக்கொண்டான்.


முதல் வியாபாரத்தை தொடங்குவதற்கு ராமன் தயாராகிவிட்டான். அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கினான்.அக்கா சரஸ்வதியைக் கட்டித்தழுவி அன்பு முத்தமிட்டான்.

செவ்வாய்க்கிழமை ஈரோட்டில் துணி சந்தை நடக்கும். அன்றுதான் பிற மாநிலங்களில் இருந்தெல்லாம் வியாபாரிகள் துணிகள் வாங்குவதற்கு ஈரோட்டில் குவிவார்கள். அங்கு குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும். அதனால், திங்கட்கிழமை இரவு புறப்பட்டு ஈரோடு சென்று துணிகள் வாங்கி விற்பனை செய்யத்தொடங்கினான், ராமன்.

முதலில் சைக்கிள் விற்பனை.. மெல்ல மெல்ல விரிவடைந்து பைக்கானது, அதுவும் வளர்ந்து பின்னர் காரில் விற்பனை..என்று வியாபாரம் வளர்ந்தது. இன்று 'ராமன் அண்ட் கோ' என்று தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் துணிக்கடைகள் பறந்து விரிந்த சாம்ராஜ்யமாக உள்ளது.

பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ராமன், கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

'நம்பிக்கை மட்டுமே போதும் நம்மை உயர்த்துவதற்கு. நான் 6 ஆண்டுகள் சேர்த்து வைத்த ரூ.60ஆயிரத்தில், ரூ.40 ஆயிரம் தான் எனது முதல் முதலீடு. 18 வயசில தொடங்கிய வியாபாரம் இந்த 9 வருஷத்திலே இன்று ரூ.4ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது. நம்பிக்கை, முயற்சி, உழைப்பு இது மூன்றும்தான் எனது தாரக மந்திரம்' என்று முடித்தபோது அரங்கம் அதிர்ந்தது.

அந்த பழைய நினைவுகள் ராமனின் மனதில் இன்றும் நீங்காத காட்சிகளாக படிந்து கிடக்கின்றன.துன்பத்தில் வளர்ந்த ராமன், உதவி செய்வதில் வள்ளல் என்று இந்த இளம் வயதிலேயே பெயர் எடுத்துவிட்டார்.

அன்று, ராமன் பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டதைப் போலவே இன்று தனது குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டார். ஆமாம், மூத்த அக்கா சரஸ்வதியை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இரண்டாவது அக்காவை தனக்கு பிஸ்னஸ் குருவாக இருந்த பன்னீர்செல்வத்துக்கு திருமணம் செய்துவைத்தார். ராமனின் அண்ணன் மூத்த மைத்துனர் பன்னீர்செல்வத்தின் தங்கை இளமதியை விரும்பினார். அண்ணன், இளமதியை திருமணம் முடித்துக்கொண்டு, தமிழகம் முழுதும் உள்ள 'ராமன் அண்ட் கோ' வின் நிர்வாகியாக உள்ளார்.


கடைசி தம்பியும், தங்கையும் அமெரிக்காவில் படித்துக்கொண்டுள்ளனர். அம்மா அப்பாவுடன் ராமன் வசிக்கிறார். ராமன் தனக்கு சிறுவயதில் இலந்தை பழம் பொருக்குவதற்கு உதவி செய்த ஹேமாவைத்தான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார்.

ஹேமாவின் குடும்பம் இன்னும் கஷ்டப்படும் குடும்பம் என்றாலும் ' நானும் சிறுவயதில் கஷ்டப்பட்டவன்தானே?' என்ற உயர்ந்த எண்ணம் எத்தனை பேருக்கு வந்துவிடும் என்று ராமன் மீது நமக்கும் ஒருவித மரியாதை ஏற்படுகிறது. அன்று ஹேமா செய்த சிறு உதவியால், இன்று அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது. நாமும் வாழ்த்துவோம்.

ஹேமா இப்போ இப்படி இருக்குமா..? ( படம் -நன்றி ஓவியர் மாருதி)

(நமக்கு சிறு சந்தேகம். சிறு வயதில் ஒருவேளை ஹேமாவை ராமன் காதலித்து இருப்பாரோ? அதனால் மறக்காமல் திருமணம் செய்கிறாரோ..? - உங்களுக்கும் அந்த டவுட் வருதில்லை..? எது எப்படியோ..? இருவரும் சேர்ந்து வாழட்டும்.)

தம்பியும், தங்கையும் அமெரிக்காவில் இருந்து இந்த மாதம் வருகிறார்கள். வந்தவுடன், ஹேமா கழுத்தில் தாலி கட்டப்போகிறார், இந்த தன்னம்பிக்கை பிசினஸ்மேன் ராமன்.

(முற்றும்)

Updated On: 2023-03-02T18:14:29+05:30

Related News

Latest News

 1. ஈரோடு
  பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
 2. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
 4. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
 5. திருப்பூர்
  திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
 6. தேனி
  சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
 7. குமாரபாளையம்
  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 8. விழுப்புரம்
  இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
 9. தேனி
  19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
 10. தேனி
  ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?