/* */

இலவங்கப்பட்டையில் இவ்வளவு பயன்களா? சத்துக்களும், மருத்துவ குணங்களும்

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

இலவங்கப்பட்டையில் இவ்வளவு பயன்களா? சத்துக்களும், மருத்துவ  குணங்களும்
X

இலவங்கப்பட்டை. (மாதிரி படம்).

கறிக்குழம்பு அல்லது குருமாக்குழம்பு என்றாலே, ‘இலவங்கப்பட்டை’ இல்லாமல் வைக்கமாட்டார்கள். ஆனால், நாம் பயன்படுத்துவது உண்மையான இலவங்கப்பட்டையா அல்லது அதன் உறவினராகிய மற்றொரு இன மரத்தின் பட்டையா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு இதோ:

இலவங்கப்பட்டை என்பது, Cinnamomum Zeylanicum Blume என்ற தாவரத்தின் முதன்மைத் தண்டு அல்லது கிளைகளின் உட்புற பட்டை ஆகும். (இலங்கையில் தான் இது அதிகம் உற்பத்தியாகின்றது. இது தான் உண்மையான இலவங்கப்பட்டை ஆகும்.). காசியா என்பது, Cinnamomum Cassia ex Blume, Cinnamomum Aromaticum Syn, Cinnamomum Burmanii Blume ஆகிய தாவரங்களின் பட்டை ஆகும். இது சீனாவில் அதிகம் விளையும் இலவங்கப்பட்டை போன்ற தாவரத்திலிருந்து பெறப்படுவது.

இலவங்கப்பட்டை மற்றும் காசியா ஆகிய இரண்டும் வேறு வேறு பொருளாகும். முதலின் நகல் போன்றது இரண்டாவது பொருள். பெரும்பாலும் காசியாவைத் தான் இலவங்கப்பட்டை என்று நம்பி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அதனை எப்படி கண்டறிவது என்பதையும் பார்ப்போம். இலவங்கப்பட்டை மற்றும் காசியா ஆகிய இரண்டிற்கும் மற்றும் அதன் பொடிகளுக்கும் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது.

இலவங்கப்பட்டையில் எவ்விதமான அயற்சுவையோ, கெட்டுப்போன சுவையோ அல்லது விரும்பத்தகாத மணமோ இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. இலவங்கப்பட்டையில் பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

இலவங்கப்பட்டையில் மற்றும் அதன் பொடியிலும் எந்த செயற்கை நிறமியும், சம்பந்தமில்லாத காய்கறியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. இலவங்கப்பட்டையில் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. இலவங்கப்பட்டையில் வெளிப்புறப் பொருட்கள் 1%-ற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

இலவங்கப்பட்டையில் பூச்சிகள் தாக்கப்பட்ட பட்டைகள் 1%-ற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. இலவங்கப்பட்டையில் கௌமாரின் (Coumarin) 0.3%-ற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. (இந்த சோதனைதான், இலவங்கப்பட்டையையும், காசியாவையும் வித்தியாசப்படுத்தக்கூடியது.)

இலவங்கப்பட்டை மற்றும் காசியா ஆகியவற்றின் தரங்கள் அனைத்தையும் ஒரே அளவில் தான் FSSAI நிர்ணயித்துள்ளது. இலவங்கப்பட்டைக்கு மட்டும் கூடுதலாக, Coumarin அளவு வரையறுக்கப்பட்டிருக்கும். காசியாவில் Coumarin இலவங்கப்பட்டையைவிடக் கூடுதலாக இருக்கும். (இது ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக் கரண்ட்ஸ், ஆப்ரிகட் மற்றும் ஜெர்ரிஸ் ஆகியவற்றிலும் சற்று அதிகம் உள்ளது.)

Coumarin என்பது இரத்தம் உறையும் தன்மையைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு காரணி. (அதாவது, இக்காரணி உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு அல்லது இக்காரணி உள்ள மருந்துகளை அவசியமற்று எடுத்துக்கொண்டவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டாலும், இரத்தம் உறையாமல், அதிக இரத்தம் வீணாகும். எனவே, இதனை மருத்துவத் துறையில் ‘Deep Vein Thrombosis & Pulmonary Embolism உள்ளிட்ட இரத்தக் கட்டிகள் உருவாகும் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.)

நூறு கிராம் இலவங்கப்பட்டையில் 247 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 1.2 கி, மொத்த கார்போஹைட்ரேட் 80.6 கி, அதில், நார்ச்சத்து 53.1 கி, புரதம் 4 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் இலவங்கப்பட்டையில் கால்சியம் 1002 மிகி (தினசரி தேவையில் 100%), இரும்புச்சத்து 8.3 மிகி (தினசரி தேவையில் 64%), மெக்னீசியம் 60 மிகி (தினசரி தேவையில் 17%), பாஸ்பரஸ் 64 மிகி (தினசரி தேவையில் 9%), பொட்டாசியம் 413 மிகி (தினசரி தேவையில் 9%), ஸிங்க் 1.8 மிகி (தினசரி தேவையில் 19%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் இலவங்கப்பட்டையில் வைட்டமின் - பி6 0.16 மிகி (தினசரி தேவையில் 12%), வைட்டமின்-இ 2.3 மிகி (தினசரி தேவையில் 15%) மற்றும் வைட்டமின்-கே 31.2 மைகி (தினசரி தேவையில் 30%) என்றளவில் உள்ளது. இலவங்கப்பட்டை தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனால், அதன் நிறம் அடர்த்தியாகும்.

இலவங்கப்பட்டையின் தனிப்பட்ட மனத்திற்கு காரணம், ‘சின்னமால்டிகைட்’ என்ற வேதிப் பொருள் ஆகும். இலவங்கப்பட்டையினை கண்ணாடி அல்லது உலோகக் கொள்கலன்களில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, குளிர்வான, ஈரப்பதமில்லாத மற்றும் வெளிச்சம் குறைவான பகுதியில் வைத்தால், 2-3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

இலவங்கப்பட்டையில் வாசம் இல்லாமல் போனாலோ அல்லது அதன் நிறம் மாறியிருந்தாலோ அதனைப் பயன்படுத்த வேண்டாம். இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்ஸ் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போரிடும் வல்லமை பெற்றது. இது ஒரு இயற்கையான ‘பாதுகாப்பான்’ (Preservative).

இலவங்கப்பட்டை ஒரு சிறந்த ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி ஆகும். இலவங்கப்பட்டை உடலில் ட்ரைகிளிஸ்ரைஸ்டுகளையும், கெட்ட கொழுப்புகளையும் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றது. இலவங்கப்பட்டை இன்சுலின் ஹார்மோனின் உணர்திறனை அதிகரித்து, இரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது. இலவங்கப்பட்டையானது அல்சைமர் மற்றும் பார்க்கின்சன்ஸ் நோய்களின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இலவங்கப்பட்டை ஓவேரியன் (Ovarian) மற்றும் கோலன் (Colon) புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம், இலவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிகைட் என்ற காரணியாகும். இலவங்கப்பட்டையானது பூஞ்சை மற்றும் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. காசியா என்ற பட்டை வகை HIV வைரஸிற்கு எதிராகவும், ஃப்ளூ & டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் போரிட்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 April 2023 10:01 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?