/* */

உணவு தட்டில் இருந்து, நீங்கள் தூக்கி எறிவது கறிவேப்பிலையை அல்ல - ‘உங்கள் ஆரோக்கியத்தை’

உணவு தட்டில், சாப்பிடத் துவங்கும் முன் முதல் வேலையாக நாம் எடுத்து அகற்றுவது கறிவேப்பிலையை தான். ஆனால், நாம் முதலில் சாப்பிட வேணடியதே அதை தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை,

HIGHLIGHTS

உணவு தட்டில் இருந்து, நீங்கள் தூக்கி எறிவது கறிவேப்பிலையை அல்ல -  ‘உங்கள் ஆரோக்கியத்தை’
X

கறிவேப்பிலையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். 

இன்றைய நவீன அறிவியல் கண் பார்வையை அதிகரிக்க, உணவில் சேர்த்துக்கொள்ள கூறும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பீட்டா கரோடின் எனும் வேதிப்பொருட்கள் தான். வேப்பிலை போன்ற தோற்றமுடையதும், உணவு பதார்த்தக் கறிக்கு பயன்படுவதுமான கறிவேப்பிலை. ஆனால் வேப்பிலைக்கு இருக்கும் மவுசும், மதிப்பும் கறிவேப்பிலைக்கு இல்லை.

உண்மையில் கறிவேப்பிலை மருத்துவ தன்மையில் வேப்பிலைக்கு சற்றும் குறையாத பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பச்சிலை மணமூட்டியான கறிவேப்பிலைக்கு சொந்த ஊர் நம் நாடும், இலங்கையும் தான். ஆனால் அதன் மருத்துவ குணங்களை அறிந்து நம் நாட்டினரை விட வெளிநாட்டினரே அதிகம் பயன்படுத்துகின்றனர்.


காய்கறிக்கடைகளிலும், சந்தைகளிலும் கடைசியாக கொசுறாக வாங்கப்படும் இந்த கறிவேப்பிலை மருத்துவ தன்மைகளை அள்ளித் தருவதில் முதல் வரிசையில் உள்ளது. முக்கியமாக வயிறு சார்ந்த கோளாறுகளை முற்றிலும் தடுத்து சாதாரண வயிற்றுப்புண் முதல் குடல் புற்றுநோய் வரை தடுக்கும் தன்மையுடையது. கறிவேப்பிலையை துவையலாகவும், மோருடன் அரைத்து ரெசிபியாகவும் எடுத்துக்கொள்ளுவது நமது பாரம்பரிய உணவு முறைகளில் உண்டு. கறிவேப்பிலையை கொத்தாக உருவி அலசி வாயிலிட்டு மென்று தின்னும் பழக்கம் இன்றும் பலருக்கு உண்டு. நம் முன்னோர்கள் கறிவேப்பிலையை நாடியதால் தான் பல காலம் கண்நோய்கள், தோல் நோய்கள், வயிறு சார்ந்த நோய்கள் இவற்றிற்கு அடிபணியாமல் இறுதி மூச்சு வரை மருத்துவமனைகளுக்கு மெனக்கெடாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து சென்றனர்.

கறிவேப்பிலையின் மருத்துவ குணத்திற்கு காரணம் அதில் காணும் 'கார்பசோல் அல்கலாய்டு' வேதிப்பொருட்கள் என்கின்றன நவீன ஆய்வுகள். மேலும் கறிவேப்பிலையில் உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்களான பி-1,பி-2, நியாசின், நோய் எதிர்ப்புசக்தியை தரும் வைட்டமின்-சி, பீட்டா கரோடின் ஆகியவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி உடலியக்கத்திற்கு தேவையான கனிம உப்புக்களான இரும்புசத்து, கால்சியம் சத்து, பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளது. இதில் உள்ள இயற்கை நிறமிசத்துக்கள் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் தன்மையும் உடையன.


கண் பார்வை

இன்றைய நவீன அறிவியல் கண் பார்வையை அதிகரிக்க, உணவில் சேர்த்துக்கொள்ள கூறும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பீட்டா கரோடின் எனும் வேதிப்பொருட்கள் தான். கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று கூறுவதும் அதனால் தான். கேரட்டில் உள்ளதைப் போன்றே, அதே அளவு பீட்டா கரோட்டின் கறிவேப்பிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேட்ராக்ட் எனும் கண்புரை நோய் வரவிடாமல் தடுக்கும். கண்களுக்கு நலம் பயக்கும் மூலிகை என்பதால் சில கிராமங்களில் 'கண்ணாத்தாள்' என்ற பெயரும் கறிவேப்பிலைக்கு உள்ளதாக அறியக்கிடப்பது கூடுதல் சிறப்பு.

சிறு கார்ப்பு சுவையும், தனக்கே உரிய நறுமணத்தையும் கொண்டுள்ள கறிவேப்பிலையானது சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்தத்தை குறைத்து உடலுக்கு நன்மை பயக்கும் என்கிறது சித்த மருத்துவ காப்பியமான அகத்தியர் குணவாகடம் எனும் நூல். அதன்படி, பித்தத்தைக் குறைக்க கறிவேப்பிலையை பயன்படுத்த நற்பலன் தரும். உணவு உண்ட உடன் மலம் கழிக்கும் பழக்கம் நவீன உணவுகளை நாடும் பலருக்கு ஏற்படுவதுண்டு. அதனை குடல் அரிப்பு நோய் (ஐ.பி.எஸ்) என்று குறிப்பதும் உண்டு. குடலில் அதிகமான பித்தத்தால் இந்நோய் உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அதற்கு கறிவேப்பிலையுடன், சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஓடு, மாம்பருப்பு இவற்றை சம அளவு ஒன்று சேர்த்து பொடியாக்கி தினசரி அரை தேக்கரண்டி அளவு மோரில் கலந்து எடுத்துக் கொண்டால் நல்ல பலனைத் தரும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுப் போக்குக்கும் இது உதவும். செரிமானத்தையும் இயற்கையாக தூண்டும்.

பெண்களுக்கு மகப்பேறு காலத்தின் போது உண்டாகும் மசக்கை வாந்திக்கு கறிவேப்பிலை சாறுடன், எலுமிச்சைசாறு, மாதுளைச்சாறு மற்றும் தேன் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதே போல், கறிவேப்பிலையின் இலை மற்றும் ஈர்க்குடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து சூப் வைத்து எடுத்துக்கொள்ள 'இரத்த சோகை' நீங்கும். அல்லது கறிவேப்பிலை சாறுடன் பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும் நற்பலன் தரும். ஆக, பெண்களுக்கு மிகச்சிறந்த ஊட்டம் தரும் கறிவேப்பிலை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


அஜீரணம்

குப்பை உணவுகளை நாடும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால் அவர்களுக்கு உணவு ஊட்டுதல் தான். அத்தகைய உணவினால் ஏற்படும் மந்தத்தால் பசியின்மை உண்டாகி, உணவு உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இயற்கை தந்த பசித்தூண்டி கறிவேப்பிலை தான். இந்த கறிவேப்பிலையுடன் 1 முதல் 3 எண்ணிக்கை வரை மிளகினை கூட்டி அரைத்து நீரில் கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க மந்தம் நீங்கி பசி எடுக்கும். அதே போல் காரத்திற்கு பின்னர் உண்டாகும் பசியின்மையில் கறிவேப்பிலையை பொடித்து மிளகு, உப்பு, சீரகம், சுக்கு இவற்றுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள பசியின்மை நீங்குவதோடு அஜீரணம், மலச்சிக்கல், கழிச்சல் நீங்கும். காரத்தின் போது உண்டாகும் அசீரணம், பசியின்மை, வாந்தி, வாய்குமட்டல் ஆகிய பல்வேறு குறிகுணங்களுக்கு கறிவேப்பிலையை, கொத்துமல்லி, புதினா, புளி, உப்பு இவற்றுடன் சேர்த்து துவையல் செய்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


நீரிழிவு நோய்

நீரிழிவு நோயிலும் கறிவேப்பிலையின் பங்கு அளப்பரியது. பொதுவாகவே நீரிழிவு நோயின் நாட்பட்ட நிலையில் கண் பாதிப்பு என்பது பலருக்கு ஏற்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பினை தடுக்க, சர்க்கரை நோயாளிகள் கறிவேப்பிலையை தினசரி எடுத்துக்கொள்வது நல்லது. இது சர்க்கரை அளவைக் குறைப்பதோடு கண் சார்ந்த நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். சித்த மருத்துவத்தில் மதுமேகம் எனும் நீரிழிவுக்காக பரிந்துரைக்கப்படும் 'மதுமேக சூரணம்' எனும் சித்த மருந்தில் கறிவேப்பிலை சேருவதும் குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், சர்க்கரை நோயின் பின்விளைவுகளைத் தடுக்கவும், கறிவேப்பிலையுடன், வெந்தயம், சீரகம், மஞ்சள் இவற்றை சம அளவு சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கூட்டும். இருதய நோய்கள் வராமல் காக்கும். கறிவேப்பிலை இலையுடன், கொய்யா இலையும், நித்யகல்யாணி இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து கசாயமாக்கி குடிக்க ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். நீரிழிவு நோயின் பல்வேறு பின் விளைவுகளை இது தடுக்கும். அதே போல் கறிவேப்பிலையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கசாயமாக்கி அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் இருதய நோய்களை தடுக்கும் வல்லமை உடையது.

தினசரி 5 கிராம் கறிவேப்பிலை பொடியை எடுத்துக்கொள்ளும் போது ரத்தத்தில் நல்ல கொழுப்பு என கருதப்படும் எச்.டி.எல் அளவு அதிகரிப்பதாகவும், எல்.டி.எல் என கருதப்படும் கெட்ட கொழுப்பின் அளவு மற்றும் டிரைகிளிசெரைடு அளவு குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. ஆக, தொற்றா நோயில் இரட்டையர்களாக கருதப்படும் நீரிழிவு மற்றும் இருதயநோய்களை தடுக்க தினமும் கறிவேப்பிலை எடுத்துக்கொள்வது வாழ்நாளிற்கு பக்க வலிமை. தோலின் நலனை காப்பதிலும் கறிவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது.


தலைமுடி வளர்ச்சிக்காக தயாரிக்கப்படும் பெரும்பாலான சித்த மருந்துகளில் கறிவேப்பிலை சேருகிறது. அதே போல் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணையில் காய்ச்சி தைலமாக்கி தலைமுடிக்கு பயன்படுத்தினால் முடிவளர்ச்சி கூடும். தலைமுடி கறுத்து வளரும். இது தலைமுடிக்கு மிகச்சிறந்த ஊட்டமளிக்கும்.


தோலில் மெலனின் நிறமியின் சுரப்பு குறைந்து வெள்ளைத் தழும்புகளை உண்டாக்கும் 'விட்டிலிகோ' எனப்படும் வெண்புள்ளி நோய் நிலையில் இயற்கையாக தோலில் நிறத்தைக் கொண்டு வர கறிவேப்பிலை பெரிதும் உதவும். அதற்கு கறிவேப்பிலையை பொடித்து தினசரி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் இரும்பு சத்து சேர்த்த சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வது கூடுதல் நலம் பயக்கும்.


ஞாபகமறதி நீங்குவதற்கும் கறிவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நரம்புகளுக்கு வன்மையும் தரும். நாம் உண்ணும் உணவு நல்ல மணத்துடன், நலத்தையும் தருவதாக இருப்பதற்கு கறிவேப்பிலை முக்கிய காரணம். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை வடகம் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பதார்த்தங்கள் பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

பொதுவாக ரசத்திலும், ரெசிபியிலும் கறிவேப்பிலையை உதறி ஓரங்கட்டும் பழக்கம் நமக்கு உண்டு. உண்மையில் நாம் ஓரங்கட்டுவது கருவேப்பிலை எனும் ஆரோக்கியம் எனும் மிகப்பெரிய புதையலைத் தான். ஏனெனில் உண்மையில் நரை, திரை, மூப்பு இவை மூன்றையும் வரவிடாமல் தடுத்து ஆரோக்கியத்தை கூட்டி நலம் பயக்கக் கூடியது கறிவேப்பிலை. அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தை சேர்த்து வைக்க எண்ணும் அனைவரும் கறிவேப்பிலையை தட்டில் ஒதுக்கக்கூடாது, அதனைப் பயன்படுத்துவது உடலுக்கு மட்டுமல்ல, உயிருக்கும் ஊட்டம் அளிக்கும்.

Updated On: 13 March 2023 3:37 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!