/* */

இலவங்கப்பட்டையா? காசியாவா? வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?

இலவங்கப்பட்டைக்கு பதிலாக காசியா விற்பனை செய்யப்படுவதால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

அசைவ சாப்பாட்டில் நிச்சயம் சேர்க்கப்படும் ஒரு உணவு சேர்க்கை பொருள் என்றால் அது இலவங்கப்பட்டை தான். தற்போது இலவங்கப்பட்டைக்கு பதிலாக காசியாவை சிலர் சேர்த்து வருகின்றனர். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? இரண்டிலும் உள்ள சத்துக்கள், மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:

இலவங்கப்பட்டை மற்றும் காசியா ஆகியவற்றின் தரங்கள் அனைத்தையும் ஒரே அளவில் தான் FSSAI நிர்ணயித்துள்ளது. நூறு கிராம் இலவங்கப்பட்டையில் 247 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 1.2 கி, மொத்த கார்போஹைட்ரேட் 80.6 கி, அதில், நார்ச்சத்து 53.1 கி, புரதம் 4 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் இலவங்கப்பட்டையில் கால்சியம் 1002 மிகி (தினசரி தேவையில் 100%), இரும்புச்சத்து 8.3 மிகி (தினசரி தேவையில் 64%), மெக்னீசியம் 60 மிகி (தினசரி தேவையில் 17%), பாஸ்பரஸ் 64 மிகி (தினசரி தேவையில் 9%), பொட்டாசியம் 413 மிகி (தினசரி தேவையில் 9%), ஸிங்க் 1.8 மிகி (தினசரி தேவையில் 19%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் இலவங்கப்பட்டையில் வைட்டமின் - பி6 0.16 மிகி (தினசரி தேவையில் 12%), வைட்டமின்-இ 2.3 மிகி (தினசரி தேவையில் 15%) மற்றும் வைட்டமின்-கே 31.2 மைகி (தினசரி தேவையில் 30%) என்றளவில் உள்ளது. இலவங்கப்பட்டை தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனால், அதன் நிறம் அடர்த்தியாகும்.

இலவங்கப்பட்டையின் தனிப்பட்ட மனத்திற்கு காரணம், ‘சின்னமால்டிகைட்’ என்ற வேதிப் பொருள் ஆகும். இலவங்கப்பட்டையினை கண்ணாடி அல்லது உலோகக் கொள்கலன்களில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, குளிர்வான, ஈரப்பதமில்லாத மற்றும் வெளிச்சம் குறைவான பகுதியில் வைத்தால், 2-3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

இலவங்கப்பட்டையில் வாசம் இல்லாமல் போனாலோ அல்லது அதன் நிறம் மாறியிருந்தாலோ அதனைப் பயன்படுத்த வேண்டாம். இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்ஸ் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போரிடும் வல்லமை பெற்றது. இது ஒரு இயற்கையான ‘பாதுகாப்பான்’ (Preservative). இலவங்கப்பட்டை ஒரு சிறந்த ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி ஆகும்.

இலவங்கப்பட்டை உடலில் ட்ரைகிளிஸ்ரைஸ்டுகளையும், கெட்ட கொழுப்புகளையும் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றது. இலவங்கப்பட்டை இன்சுலின் ஹார்மோனின் உணர்திறனை அதிகரித்து, இரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது. இலவங்கப்பட்டையானது அல்சைமர் மற்றும் பார்க்கின்சன்ஸ் நோய்களின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இலவங்கப்பட்டை ஓவேரியன் (Ovarian) மற்றும் கோலன் (Colon) புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம், இலவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிகைட் என்ற காரணியாகும். இலவங்கப்பட்டையானது பூஞ்சை மற்றும் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. காசியா என்ற பட்டை வகை HIV வைரஸிற்கு எதிராகவும், ஃப்ளூ & டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் போரிட்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது.

இலவங்கப்பட்டை அல்லது காசியா ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு, அவற்றில் உள்ள Coumarin அளவினைப் பொறுத்ததாகும். இலவங்கப்பட்டையில் Coumarin மிக மிகக் குறைவாகவே (Trace) இருக்கும். ஆனால், ஒரு கிராம் காசியாவில் 1 மிகி Coumarin உள்ளது. ஆனால், ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச Coumarin அளவு 0.1 mg/kg BW என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 50 கிலோ எடையுள்ள மனிதன் 5 மிகி வரை Coumarin இருக்குமாறு, 5 கிராம் காசியாவை மட்டுமே சாப்பிடலாம். ஆனால், இலவங்கப்பட்டையை இதற்கு மேல் சாப்பிடலாம்.

ஒரு வேளை Coumarin அதிகமாக உள்ள காசியாவை சாப்பிட்டால், ஈரல் பாதிக்கப்படலாம். வாய்ப்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரேமூச்சில் காசியாவை சாப்பிட்டால், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஈரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இலவங்கப்பட்டை மற்றும் காசியா ஆகிய இரண்டிற்கும் ரத்தத்தில் சக்கரையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது.

எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்கான மருந்துகளுடன், அதிகளவு பட்டையை சாப்பிட்டால், ரத்தத்தில் சக்கரையின் அளவு திடீரென்று குறைய வாய்ப்புள்ளது (Hypoglycemic). எனவே, சக்கரை நோயாளிகள் “காசியா” மற்றும் "இலவங்கப்பட்டை” ஆகிய இரண்டையும் மிகவும் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை மற்றும் காசியா ஆகிய இரண்டும் வேறுபட்ட மற்றும் தரங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்கள்.இதில், காசியா விலை மலிவானது. எனவே, இலவங்கப்பட்டையில் காசியா, தரம்குறைந்த பட்டை ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன.

இலவங்கப்பட்டையையும், காசியாவையும் வித்தியாசப்படுத்தும் சோதனை:

ஒரு சிறிய அளவிலான இலவங்கப்பட்டையைக் கண்ணாடி தட்டில் வைக்கவும். தட்டில் நீங்கள் வைத்த இலவங்கப்பட்டையின் வெளிப்புற மற்றும் உட்புற அடுக்கிற்கிடையே, பல்வேறு மென்மையான அடுக்குகள் இருந்தால், அது இலவங்கப்பட்டை அல்ல, அது காசியா என்று சொல்லக்கூடிய மற்றொரு பட்டை வகை.

மற்றொரு சோதனை: இலவங்கப்பட்டையை பென்சிலில் சுற்ற முயற்சிக்கவும். இலவங்கப்பட்டை சற்று மெல்லியது. அதனால், இலவங்கப்பட்டையால் பென்சிலை சுற்றிவிடலாம். ஆனால், காசியா சற்று தடிமனானது, அதை பென்சிலில் சுற்ற இயலாது. இலவங்கப்பட்டை சற்று மென்மையான இனிப்பான சுவை உடையது. ஆனால், காசியா சற்று அதிக காரத்தன்மை உடையது.

இலவங்கப்பட்டை இளம் பழுப்பு நிறம் உடையது. ஆனால், காசியா சிவப்பு கலந்த பழுப்பு நிறம் உடையது. இலவங்கப்பட்டை மென்மைத் தன்மை உடையது. ஆனால், காசியாவின் மேற்பரப்பு சற்று கரடுமரடாகவும், சமதளமற்றும் இருக்கும். இலவங்கப்பட்டைக்கும், காசியாவிற்கும் இடையே வித்தியாசப்படுத்தும், Coumarin அளவினை 2017-ல் FSSAI அமுல்படுத்தியது.

எனவே, இலவங்கப்பட்டையில் காசியாவின் கலப்படத்தினை பகுப்பாய்வின் மூலம் எளிதில் கண்டறிய இயலும். அதனால், தற்பொழுது பெரும்பாலான காசியாவின் பாக்கெட்டுகளில், ‘Cassia Bark' என்றே பதிவு செய்துள்ளார்கள். மேலும், இலவங்கப்பட்டை உள்ள உணவுப் பாக்கெட்டின் லேபிளில், ‘Cinnamon (Dalchini) என்று பதிவு செய்ய FSSAI 2018-ல் வலியுறுத்தியுள்ளது. எனவே, கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பட்டை, கிராம்பு, கசகசா உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்த்து, கறிக்குழம்பு சமைக்க வேண்டும் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் வரையறுத்தது என்பது, வெறும் சுவைக்கும் மட்டுமல்ல. இறைச்சியில் உள்ள கொழுப்பினால், உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துவிடக் கூடாது என்பதிற்கும் தான்.

இலவங்கப்பட்டை vs காசியா என்ற போட்டியில் வெல்வது என்னவோ, இலவங்கப்பட்டை தான்..!

ஆகவே, மக்கள் அனைவரும், இலவங்கப்பட்டை வாங்கும் போது, அதன் பாக்கெட்டில் ‘Cinnamom' அல்லது 'Cassia Bark' என்றுள்ளதா என்பதை படித்து, ‘Cinnamom’ என்று போட்டிருந்தால் மட்டும் வாங்கிப் பயன்படுத்தவும். இல்லையெனில், ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற பழமொழிக்கேற்ப, இலவங்கப்பட்டையின் உறவினரான காசியாவை, அதன் பெயரைக் கவனித்துப் பார்த்து வாங்கி, அதனை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 April 2023 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  2. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  9. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  10. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...