/* */

பச்சைப் பட்டாணியில் செயற்கை நிறமி: கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

பச்சை பட்டாணியில் செயற்கை நிறமி கலந்திருந்தால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

பச்சைப் பட்டாணியில் செயற்கை நிறமி: கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?
X

பச்சை பட்டாணி. (மாதிரி படம்).

நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பச்சை பட்டாணியில் பச்சையாக தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கையான நிறமி சேர்க்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட பச்சை பட்டாணி குறித்தும் அதை கண்டறிவது குறித்தும் உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

பச்சைப் பட்டாணியை உரிக்காமல், 8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் பாதுகாத்தால், 14 நாட்கள் வரை பயன்படுத்தலாம். பச்சைப் பட்டாணியை உரிக்காமல் அறை வெப்பநிலையில் பாதுகாத்தால், இரண்டு நாட்களுக்குள் அதனைப் பயன்படுத்துவது நலம். உறைய வைக்கப்பட்ட பச்சைப் பட்டாணியை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்துவிட்டால், திரும்ப உறைய வைக்காமல் பயன்படுத்திடல் வேண்டும்.

பச்சைப் பட்டாணியில் முக்கிய கலப்படம் ‘மேலைக்கேட் கிரீன்’ என்று சொல்லக்கூடிய செயற்கை நிறமி தான். பச்சைப் பட்டாணியில் (Raw Green Peas) செயற்கை நிறமி உள்ளதா எனக் கண்டறிய, ஒரு கண்ணாடி டம்பளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு பச்சைப் பட்டாணியைப் போட்டால், செயற்கை நிறமி சேர்க்கப்பட்டிருந்தால், தண்ணீரின் நிறம் பச்சையாக மாறும். செயற்கை நிறமி இல்லையெனில், தண்ணீரின் நிறம் மாறாது.

பொதுமக்கள் பச்சைப் பட்டாணியை அடர் பச்சை நிறத்தில் தான் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை “பச்சைப்” பட்டாணி என்ற பெயரினாலோ என்னவோ?! ஆனால், உரிக்காத மற்றும் உரித்த பச்சை பட்டாணி விதைகள் என்பது, சமைக்காத பச்சைப் பட்டாணி விதைகள் ஆகும். ‘பச்சையாக’ (Raw) என்பதைத் தான், ‘பச்சையான’ (Green) என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

மேலும், பொதுமக்கள் உரிக்காத முழு பச்சைப் பட்டாணியை வாங்கி, உரித்து சமைப்பதில் சோம்பேறித்தனம் காண்பிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால், உரித்த பட்டாணியை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். நமது சோம்பேறித்தனத்தை தனக்கு சாதகமாகக் கொண்ட ‘சில’ வணிகர்கள், பச்சைப் பட்டாணியை உரித்துத் தருவதுடன், நுகர்வோரின் பார்வையை இழுக்க, செயற்கை பச்சை நிறமேற்றம் செய்தும் விற்பனை செய்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், ஒரு கான்கிரீட் கலவை இயந்திரத்தில், பச்சைப் பட்டாணியை நிறமேற்றம் செய்வது போல் வீடியோ பரவியது. இதன் உண்மைத் தன்மையோ, வீடியோ எடுக்கப்பட்ட இடமோ உறுதி செய்யப்படவில்லை. ஆனால், உரித்த பச்சைப் பட்டாணியை நிறமேற்றம் செய்யும் வேலை, இன்றும் குடிசைத் தொழில் போல் எங்கோ நடந்துகொண்டு தான் இருக்கின்றது.

நாம் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட வேண்டும் என்றால், உரிக்காத முழு பச்சைப் பட்டாணியை புதிதாக வாங்கி, உரித்து, சமைத்து சாப்பிட வேண்டும். உரித்த பச்சைப் பட்டாணி மட்டுமே வேண்டும் என்பவர்கள் அதை வாங்கி சென்று, அதனைத் தண்ணீரில் போட்டு, நன்கு கழுவி, அதன் பின்னர் சமைத்து, அளவுடன் சாப்பிட்டு, நலமுடன் வாழ்வோம் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 10 May 2023 4:44 AM GMT

Related News