/* */

எம்.ஜி.ஆர். படத்தில் நடிப்பதற்கு தொழிலாளர்கள் விரும்பக் காரணம் என்ன?

எம்.ஜி.ஆர். படத்தில் நடித்தால் சொன்ன தேதிக்கு சம்பளம் கைக்கு வந்து விடும் என்பதால் அவர்படத்தில் நடிக்க தொழிலாளர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்

HIGHLIGHTS

எம்.ஜி.ஆர். படத்தில் நடிப்பதற்கு தொழிலாளர்கள் விரும்பக் காரணம் என்ன?
X

எம்.ஜி.ஆர்., உடன் நடிகர் ராகவன்.

அப்போதைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட எம்ஜிஆர்அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள்வார்.

எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவனுக்கு கோரிக்கை விடப்பட்டது. தனது நிலையை கவிஞர் வாலியிடம் வி.எஸ்.ராகவன் கூற உடனே, வாலி ஒரு யோசனை கூறினார். அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார்.

வாலியின் யோசனைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் கூறியது இதுதான். ''எனது சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறைவாக நான் வாங்கிக் கொண்டது தெரிந்தால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?'' என கேட்க, தயாரிப்பு மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளத்தை அவருக்கு கொடுத்தது.

ஒருமுறை வி.எஸ்.ராகவனின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்ற கௌரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து ''உங்கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்'' என்று அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்தார். அதற்கு வி.எஸ்.ராகவன், ''இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றியைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க'' என்று கூறி ஏற்க மறுத்தார்.

இதில் எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத்தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் என்ற முறையில் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.

''என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர்கள். நன்றி. ஆனால், என் தாயாருக்கு உடல்நிலை சரியாகி வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப்படியிருக்கும்போது, மருத்துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப்பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்'' என்று கூறினார்.

அவரது விளக்கத்தை பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர், அவரை மனதார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ''எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?'' என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

Updated On: 20 Nov 2022 6:51 AM GMT

Related News