/* */

'வைகைப்புயல்' வடிவேலு - மக்கள் மனங்களை வென்றெடுத்த 'நகைச்சுவை' மன்னன்

நகைச்சுவை நடிப்பு என்பது ஆகப் பெரிய திறமைசாலிகளுக்கே கைகூடும். அதில், நடிகர் வடிவேலு மக்கள் மனங்களில், என்றென்றும் வலம்வரும் மிகச்சிறந்த, ஒப்பீடற்ற நகைச்சுவை கலைஞன்.

HIGHLIGHTS

வைகைப்புயல் வடிவேலு - மக்கள் மனங்களை வென்றெடுத்த நகைச்சுவை மன்னன்
X

இம்சை அரசன் புலிகேசியாக, மக்களை ‘கிச்சுகிச்சு’ மூட்டிய நடிகர் வடிவேலு.

சினிமாத்துறையில் பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பின், நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் திரும்ப வந்துள்ளார். தற்போது 'பிஸி'யாக இருக்கும் வடிவேலு, பல படங்களில் நடித்து வருகிறார். அவரது 'நாய் சேகர்' படத்தின் முதல் பாடல் கூட வெளியாகி விட்டது. வடிவேலுவின் வரவை ஒட்டுமொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில், வடிவேலு பற்றி மற்றவர்களுடன் ஒப்பிடலாமா? கூடாதா? என்ற விவாதம் ரசிகர்களுக்கு இடையே தொடங்கி உள்ளது.


கலைவாணர் என்.எஸ்.கே., வின் நகைச்சுவையில் மக்கள் அறியாமையை விலக்கவும், சமூக அவலங்களைச் சாடி முற்போக்கான பார்வையை முன்னெடுக்கவுமான ஒரு நோக்கம் இருந்தது. அவை அந்த காலகட்டத்தில் தேவையாக ஏற்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகைச்சுவை நடிகருக்கு சிலை வைக்கப்பட்டதென்றால் அது என்.எஸ்.கேவுக்கு மட்டுமே.

கலைவாணர் காலத்தில் இருந்த காளி என்.ரத்தினமும் அபாரமான திறமைசாலி தான். சபாபதி படம் ஒன்று போதும் காளி என்.ரத்தினத்தை காலமெல்லாம் நினைவு கூற. இவர்கள் இருவரும் அந்தக் கால எம்.ஜி.ஆர் போன்ற இளம் நடிகர்களுக்கு ஆசான்களாகத் திகழ்ந்தவர்கள்.


சந்திரபாபுவும் ஒரு பிறவி மேதை. நவரசபாவமும் வெளிப்படுத்த தெரிந்த அபார நடிகன். நடனம், பாடல்களிலும் கொடிகட்டிப் பறந்தார். அடுத்து நாகேஷ் ஒரு சகாப்தமாக எழுந்து நின்றார். சோவுக்கு அழகான அப்பாவி முகம், முட்டைக் கண்கள் ப்ளஸ் பாயிண்ட். அத்துடன் அரசியல் நையாண்டி அவருக்கு கைகொடுத்தது. அரசியல்வாதிகளின் போலித்தனங்கள், பேராசை, சுயநலம், அடாவடித்தனங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியதில் வெற்றி பெற்றார். எனினும், காலப் போக்கில் அது திராவிட இயக்க வெறுப்பு என்பதாக சுருங்கி போனதால், அவரது நகைச்சுவையும் மக்களிடம் எடுபடாமல் நீர்த்துப் போனது.

சுருளிராஜன் அப்பாவித்தனமான பாத்திரங்களில் மனதை அள்ளிச் சென்றார். கவுண்டமணி-செந்தில் காமெடி ஒரு குறிப்பிட்ட காலம் மக்கள் மனதை கொள்ளையிட்டது.

இந்த இருவர் அணியும், ஜனகராஜனும், சார்லியும், விவேக்குமாக மிகப் பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சிய ஒரு காலகட்டத்தில் வத்தலும், தொத்தலுமாக, கருப்பாக வறுமையில் அடிபட்ட அடையாளங்களுடன் வந்தவர் தான் வடிவேலு.


நகைச்சுவை மேதமைக்கு மனித மனங்களின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். மனித மனங்களில் தோன்றும் பேராசை, அகம்பாவம், அறியாமை, இயலாமை, அவசரக் குடுக்கைத்தனம்.. ஆகியவற்றை துல்லியமாக உள்வாங்கி, வெளிப்படுத்த முடிந்தவர்களாலேயே நகைச்சுவையை உருவாக்கமுடியும். இதில் முன்னவர்கள் ஓவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மேதைகள். இதில் அனைவரும் வியக்கதக்க வகையில் ஆகச் சிறந்த நகைச்சுவை நிபுணத்துவம் பெற்றவர் வடிவேலு. அவர் 'பிஸி'யாக நடிப்பதை நிறுத்தி பத்தாண்டுகளாகியும் கூட இன்னும் மக்களுக்கு அரசியல்,சமூக பிரச்சினைகளின் வெளிப்பாட்டுக்கு அவர் முகபாவங்களே அடையாளமாகிறது என்றால், இதைவிட வேறென்ன வேண்டும். வடிவேலுவின் உடல்மொழியும், அவரது வசன உச்சரிப்பும், நவரச பாவங்களும், நகைச்சுவை நடிப்பின் உச்சத்தில், மிகச்சிறந்த மன்னனாக, அமர வைத்து அழகு பார்க்கிறது.

Updated On: 18 Nov 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...