/* */

Tamil cinema actor danaal thangavelu -ஆயிரம் படங்கள் கடந்த டணால் தங்கவேலு..!

டணால் தங்கவேலு என அழைக்கப்பட்ட கே. ஏ. தங்கவேலு இந்திய திரையுலகின் முடிசூடா மன்னனாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

HIGHLIGHTS

Tamil cinema actor danaal thangavelu -ஆயிரம் படங்கள் கடந்த  டணால் தங்கவேலு..!
X

மறைந்த நடிகர் தங்கவேலு 

1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இவர் இணைந்து நடித்த கல்யாணப் பரிசு திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் என்றும் நிறைந்துள்ள நகைச்சுவைப்படமாகும்.

தனது 9-ஆவது வயதிலேயே நாடகத்தில் நடிக்க வந்தவர். நாடகக் கம்பெனிகளில் வளர்ந்து தன் இளம் பருவத்திலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஆகியோர் இருந்த கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அவர்களது ‘பதிபக்தி’ நாடகம் தான் பின்னாளில் ‘சதி லீலாவதி’ என்ற படமாகவும் வந்தது.

அந்த இளம் வயதில் நாடகத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்த போது தங்கவேலு மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று வயதான வேடங்களையே ஏற்று நடித்தார்.

சினிமாவிலும் அதை மாற்றிக் கொள்ளாமல் பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்பட பல படங்களில் வயதான வேடங்களில் நடித்தார். இவர் நடிகர் திலகம்- நாட்டியப் பேரொளியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.

1275-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். கைதி கண்ணாயிரம், கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, நான் கண்ட சொர்க்கம், கற்புக்கரசி, எங்க வீட்டுப் பிள்ளை, சிங்காரி,அமரகவி, கலியுகம், பணம், அன்பு, திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே, பணக்காரி, பணம் படுத்தும் பாடு, பொன் வயல், அறிவாளி, தெய்வப்பிறவி, குலேபகாவலி, போன மச்சான் திரும்பி வந்தான், விளையாட்டுப் பிள்ளை, வைரமாலை போன்ற 1275-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நாடகங்களில் நடித்துள்ளார். கலைவாணரின் இயக்கத்தில் ‘பணம்’ [1952] படத்தில் அசல் கிழவனாக அதுவும் வில்லத்தனம் கலந்து கறார் பேர்வழியாக நடித்திருப்பார் கே.ஏ.தங்கவேலு. கே. ஏ. தங்கவேலுவும், எம்.சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, கல்யாணப் பரிசு படத்தின் நூறாவது நாள் விழாவின் போது மதுரையிலுள்ள ஒரு கோயிலில் வைத்து 1959-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.


எம்.சரோஜா இவரது இரண்டாவது மனைவி. இத்தம்பதியருக்கு ஒரு மகள். சுகம் எங்கே படத்தில் ‘டணால்னு சொல்லு’ , ‘டணால்னு அடிச்சுட்டான்’ என்று அடிக்கடி ’டணால்’ சேர்த்து வசனம் பேச அதுவே அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் அதிகப் படங்களில் நடித்தவர் கே.ஏ.தங்கவேலு.

தி நகர் ராஜா பாதர் தெருவிலுள்ள தங்கவேலுவின் வீட்டுக்கு அருகில் மற்றொரு வீடும் இருந்ததாம். 1958-இல் அந்த வீட்டைச் சுற்றி பெரிய பந்தல் போட்டு தங்கவேலு ‘நவராத்திரி விழா’ ஒன்றைக் கொண்டாடினார். அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி தமிழ்நாட்டிலேயே யாரும் நவராத்திரி விழாவை அவ்வளவு பிரம்மாண்டமாக, பிரமாதமாக கொண்டாடியதில்லை என்று கூறுமளவில் அதை தனி மனிதனின் சாதனையாக்கிவிட்டார்.

திருவாவடுதுறை ராஜரத்னம், காருக்குறிச்சி அருணாச்சலம், சிதம்பரம் ஜெயராமன் , ஏ.கே.சி. நடராஜன், தியாகராஜ பாகவதர் என்று ஒவ்வொரு நாளும் ஒரு இசை பிரபலத்தின் நிகழ்ச்சி நடைபெற்றதாம். 9 நாளும் கல்யாண வீடு போல் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சாப்பாடு பந்தி நடைபெறுமாம். இப்படி முடிசூடா மன்னனாக வாழ்ந்த டணால் தங்கவேலு மீது கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

"டணால்" என்பது கோவில் மணியோசை போன்றதொரு சொல்லாகும். அதனால் டணால் தங்கவேலுவின் குரலும் ஒரு தனிப்பெருமைக்குரியதாக விளங்கியது. ஒரு கோவில் மணி ஓசையின் பெருமைபோல களங்கமற்று வாழ்ந்து மறைந்திருக்கிறார், "டணால்.......தங்கவேலு"

Updated On: 29 Sep 2023 8:05 AM GMT

Related News