/* */

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் நெகிழ வைக்கும் கவிதைகள்

Na Muthukumar Kadhal Kavithaigal-ஆனந்த யாழை மீட்டிய, கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதை நா. முத்துக்குமாரின் சிறந்த கவிதை வரிகள்

HIGHLIGHTS

Na Muthukumar Kadhal Kavithaigal
X

Na Muthukumar Kadhal Kavithaigal

Na Muthukumar Kadhal Kavithaigal

ஒருவரின் பெயரைச் சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும் என்றால் அது பாடலாசிரியர் நா முத்துக்குமார் பெயரைத்தான். காதல் ஜோடிகள், ஒருதலையாக காதலிப்பவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என அனைவருக்குமான பாடல்களை உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார்

பள்ளி ஆசிரியருக்கு மகனாய்ப் பிறந்து, உதவி இயக்குனராய் பணிபுரிந்து, பின்னர் பாடலாசிரியராக உருவானவர் நா.முத்துக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தாயை இழந்தார். தாயின் மடியில் வளர வேண்டிய பருவத்தில் தந்தையின் வழிகாட்டுதலால் தமிழின் மடியில் வளர்ந்தார்.

தந்தை ஒரு படிப்பாளி என்பதால் வீட்டில் புத்தகங்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை. ஆனாலும் தற்போதைய தலைமுறை போல் எல்லாம் கையில் இருந்தும் பயன்படுத்தாமல் காலத்தை கழிக்கவில்லை…

அனைத்தையும் கற்க ஆரம்பித்தார், நூல்களில் பிரியம் அதிகரித்தது… சிறுவயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார்..

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தார். உயர் கல்வியில் பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவராகவும் விளங்கினார்.

"தமிழ் திரைப்பட பாடல்கள் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் பி.ஹச்டி ஆராய்ச்சியும் மேற்கொண்டார். சீமான் இயக்கிய 'வீரநடை' என்ற படத்தில் தன் பாடலாசிரியர் பயணத்தை தொடங்கினார். "முத்து முத்தாய் பூத்திருக்கும் முல்லை பூவை புடிச்சிருக்கு" எனத் தொடங்கும் அந்த பாடல் அதிக உவமை உருவகங்கள் கொண்ட பாடல் என்ற பெருமைக்கு உரியது.

தமிழ் சினிமா ரசிகர்களை தனது பாடல் வரிகளில் ஆட்சி செய்தவர். காதல், தாலாட்டு, வலி ,அழுகை, ஆனந்தம் என நா. முத்துக்குமாரின் வரிகள் பலருக்கு உற்சாக டானிக். வார்த்தைகளை பூமாலையாக கோர்த்து பாடல் எழுதுவதில் வல்லவர்.

அவரது பாடல்கள், இலக்கியத்தின் உச்சாணி கொம்பில் நின்று ஆடாமல் ஒருவனுக்கு எட்டுகின்ற மரக்கிளை போலவும், அதிலிருந்து சொட்டும் மழை நீர் அவனுக்கு தாகம் தீர்ப்பதும் போல இருந்தன.

உலக வாழ்க்கையை அரை நொடியில் ஆணி அடித்து விளங்க வைத்தது இவரின் வரிகள், 'உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்" இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த வாழ்வின் அடிப்படையை உணர்த்தும்

ஒரு "உருவகத்தை" அடுத்த கட்டத்திற்கு பாடல் வரிகளின் வழியாக கொண்டு செல்லும் வித்தகர்.

"கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதே" என " காதல் கொண்டேன்" படத்தில் பூக்களுக்கு அந்தஸ்து இல்லை என்று எழுதிய அவர்,

காதல் படத்தில் அந்தப் பூக்களையும் வண்ணத்து பூச்சிகள்தேடி வரும் என்ற அர்த்தத்தில் "கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?" என மாற்றி எழுதி இருப்பார்.

இவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. இவரின் "ஆனந்த யாழ் மீட்கப்படாத" வீடு இல்லை

இவரின் காதல் வரிகளை பயன்படுத்தாத காதலர்கள் மிக மிகக் குறைவு என்று சொல்லலாம். இவரின் பெரும்பாலான காதல் பாடல்கள் தத்துவ வரிகளை கொண்டிருக்கும் .

பெரும்பாலும் காதல் பாடல்களாகவே அமைந்துவிடுவதால், காதல் பாடல்களில் தத்துவங்களை படைக்க முயற்சித்தேன் என்றே சொல்லி இருப்பார்.

அவர் எழுதிய அழகான காதல் தத்துவ பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஜீவன் இருக்கும் வலிகளுடன் கூடிய வலி நிவாரணி என்றே சொல்லலாம் .

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்...

"ஒரு கல் ஒரு கண்ணாடிஉடையாமல் மோதிக்கொண்டால் காதல்..

ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்..

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஹோ..

கண்ணீர் மட்டும் துணையாகுமே."

"திமிருக்கு மறுபெயர் நீதானே

தினம் தினம் உன்னால் இறந்தேனே

மறந்திட மட்டும் மறந்தேனே"

எவ்வளவு அழகான வரிகள்..

அதே பாடலில்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை..

அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை.. என்ற வரிகளில் காதலின் வலியை அழகாக சொல்லி இருப்பார்.

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்

அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்

இந்த காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்திரவதை தானே! என்று காதல் செய்து பிரிந்தால் வரும் வலியை நயம் பட எழுதி இருப்பார்.

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்

உன் குரல் கேட்டால் நான் அறிவேன்

உன் நிழலுடனே நான் வருவேன்..

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்

புறக்கணித்தால் நான் என்னாவேன்

பெண்ணே எங்கே நான் போவேன்

இந்த வரிகளில் காதல் சோகம், தனிமை, ஏக்கம் இப்படி எல்லாம் நிரம்பி இருக்கும். உண்மையாக காதல் செய்து பிரிந்தவர்கள் மனதில் இந்த பாடல் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

என்று காதலும் காமமும் இணைந்த தேடலை மிக மென்மையாக தன் பாடல்களில் சொன்னவர் நா.முத்துக்குமார். "எனக்குப் பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே" என்று எழுதியவர்

வெயிலோடு விளையாடி.. பாடலை கேட்டாலே,நம்மை அறியாமல் குழந்தை பருவத்திற்குள் சென்றுவிடுவோம்.ஒரு மனிதன் தன் குழந்தை பருவத்தை எவ்வளவு நேசித்திருந்தால் இவ்வளவு ஒரு அழகான வரிகளை படைக்க முடியும்

வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரியுரும்

கருவேலங் காட்டோரம்

தட்டானைச் சுத்தி சுத்தி

வட்டம் போட்டோமே

தாயை பிரிந்து வாடும் பல பேருக்கு ராம் படத்தில் வரும் "ஆராரிராரோ" பாடல் மிகச்சிறந்த ஆறுதல்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில், வழி நடத்தி சென்றாயே

உனக்கே.... ஓர் தொட்டில் கட்டி, நானே தாயாய் மாறிட வேண்டும்

என்ற வரிகளும்

இறைவா நீ ஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற..

என்ற வரிகளும், வேற லெவல்

கற்றது தமிழ் படத்தில் வரும் "பறவையே எங்கு இருக்கிறாய்"பாடலில்

உன்னோடு நானும் போகின்ற பாதை

இது நீளாதோ தொடுவானம் போலவே

கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்

உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்

இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்

பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா

என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே

முதல்முறை வெளிச்சம் பிறக்குதே

முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே

என காதலின் மகிமையை கூறியிருப்பார்

அப்பா மகள் உறவுக்காக இவர் எழுதிய வரிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றது. "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது அல்ல என்று" என்ற வரிகளில் தந்தை மகளின் உறவின் உன்னதத்தை ஒரு படி மேலே சென்று பார்த்து விட்டார்

"ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு" என்ற பாடலில் 'தாயாக தந்தை மாறும் ஒரு காவியம்' என ஆண்களுக்கும் தாய்மை உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு மகன்களுக்கும் அவர்களின் தந்தையின் அருமையை உணர்த்திய பாடல், இவர் எழுதிய தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல். இந்த பாடலைக் கேட்டு கண் கலங்காத ஆளே இல்லை

தீபாவளி படத்தில் இடம் பெற்ற "போகாதே போகாதே" என்ற பாடல் காதல் பிரிவையும், ஒரு தலை உணர்வுகளையும் அழகாக எடுத்துக்காட்டும். "கல்லறையின் மீது ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி" என்ற வரிகளில் காதல் மரணத்தைத் தாண்டி வாழும் சக்தி பெற்றது எனக் கூறியிருப்பார்.

"கல்லறை மீதுதான் பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதோ" என்ற வரிகளில் காதலின் இயலாமையை பற்றி பேசி இருப்பார்.

மன்மதன் படத்தில் உள்ள "காதல் வளர்த்தேன்" பாடலில் காதல் ஜோடிகள், ஒருதலையாக காதலிப்பவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என அனைவருக்குமான பாடல்களை உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார்.

அழகுக்கு இலக்கணம் வகுத்த 'அழகோ அழகு' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.


கவிதை எழுதுவதில் மிகுந்த நாட்டமும் புலமையும் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள் இங்கே…

வாழ்க்கை

கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது

எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்

ஸ்லத புராணம்

பெருமாள் கோயில் பிராகாரமும், பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்

ஆயிரங்கால் மண்டபத்தின் அமானுஷ்ய இருட்டும்கூட

காலத்தில் கரையாமல் அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து நம் பார்வைகளுடன் திரும்பும்

காயத்ரியின் கால் தடங்களில் மட்டும் சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!

உயில்

மகன் பிறந்த பிறகுதான் அப்பாவின் பாசத்தை அறிந்துகொள்ள முடிந்தது.

என் அன்பு மகனே உன் மகன் பிறந்ததும் என்னை நீ அறிவாய்!


சுடலையேகி வேகும் வரை சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்

உடலைவிட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப் பார்!


அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம்

சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன!

மாநகரத்துச் சாலைகளுக்கு அவ்வப்போது உயிர் கொடுக்கிறது

தொட்டியில் பூத்த ரோஜாச் செடிகளுடன்

வந்து போகும் மாட்டு வண்டி!

காற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும்

கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை!

இட்லிகள் மென்மையானவை. வெதுவெதுப்பானவை.

சைபர் சைபராய் வட்டக்குழியில் வெந்தவை.

திடப்பொருளாய் தோன்றி இளகிய நிலையில் திரவமாகி

வெப்பத்தால் இறுகியது அதன் உருவம்.

மிகமுக்கியம்

இட்லிகள் கொள்கையற்றவை.

சாம்பாரில் மிதவையாகவும்,

சட்னியில் துவையலாகவும்,

ஏதுமற்றப் பொழுதுகளில்

எண்ணெய் மிதக்கிற மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்

எதனுடனும் அமையும் இட்லிகளின் கூட்டணி

கம்ப்யூட்டர் 'சிப்ஸ்' விற்கிற அந்நிய நாடுகளில்

உள்ளூர் இட்லிகளுக்கு அமோக வரவேற்பு

மேலும் இட்லிகளை அஃறிணை என்று அர்த்தப்படுத்த முடியாது

அவை குட்டிப்போட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்தவை.

நான் ஏன் நல்லவனில்லை

என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று, நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு. அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று, உங்களிடம் அதைப்

படிக்கக் கொடுக்கிறேன்..


இவர் மீட்டிய ஆனந்த யாழின் ஒலி இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

"நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா"... என்ற வரிகள் அவருக்கே சாலப்பொருத்தம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 8:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!