/* */

அமுதை பொழியும் நிலவே, நீ அருகில் வராதது ஏனோ...

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், ஜனவரி 27ல் காலமானார். அவருக்கு வயது 86.

HIGHLIGHTS

அமுதை பொழியும் நிலவே,  நீ அருகில் வராதது ஏனோ...
X

சமீபத்தில், மறைந்த நடிகை ஜமுனா ( கோப்பு படம்)

நடிகை ஜமுனாவின் மறைவு, தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்த நடிகை ஜமுனா, கடந்த 1953-ம் ஆண்டு வெளியான 'புட்டிலு' என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ராமராவ், அக்கினேனி என அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்களுக்கு ஜோடியாக நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜமுனா.


தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ளார் ஜமுனா. இவர் இதுவரை 198 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் சிறந்து விளங்கி உள்ளார்.

1980களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜமுனா, 1989ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் அரசியலில் இருந்து விலகினாலும்1990 களில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், தற்போது வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ள நடிகை ஜமுனாவின் மறைவு, தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் ஏராளமான படங்கள், பிற மொழிகளில் பல படங்கள், தமிழில் மட்டும் சில படங்கள் என்றிருந்தாலும் அந்தக் காலத்தில் அவரின் கண்களுக்காகவே பெரிதும் ரசிக்கப்பட்டார்; அவரின் நடிப்பால் பாராட்டப்பட்டார். ''நீ நடிக்க வரலாமே'' என்று அவரை சினிமாவுக்குள் உந்தித்தள்ளியவர், நடிகையர் திலகம் சாவித்திரி.

கர்நாடக மாநிலம் பூர்விகம். அப்பாவுக்கு இசையார்வம். அம்மாவுக்கு நாட்டியத்தில் ஈடுபாடு. தங்கள் மகளை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்பினார்கள். ஆனால், காலம் ஒரு டாக்டரின் மூலமாகவே அவரை கலையுலகிற்குள் கைப்பிடித்து அழைத்து வந்தது என்பதுதான் ஜமுனாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யம்.


தெலுங்கு சினிமாவின் ராஜா என்று போற்றிக்கொண்டாடப்படுபவர் காரிகாபட்டி ராஜாராவ். மிகச்சிறந்த மருத்துவர். அதேசமயம், புராணம் என்கிற சிறிய வட்டத்துக்குள்ளேயே உழன்று கொண்டிருந்த தெலுங்கு சினிமாவில், சமூகக் கதைகளும் பண்ணலாம் என மடைமாற்றிவிட்ட மாயாஜாலக்காரர் காரிகாபட்டி ராஜாராவ்.

கர்நாடகத்தில் இருந்து ஆந்திரா பக்கம் ஜாகையை மாற்றிக் கொண்டது ஜமுனாவின் குடும்பம். இவரின் நிஜப்பெயர் ஜனாபாய். இவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி, ஜனாபாய்க்கு மிகவும் நெருக்கமானார். பேசுகிற போதெல்லாம், "நீ நடிக்க வாயேன்" என்பார். "நீ என்னைவிட அழகா இருக்கே" என்று பாராட்டினார். ''நீ சினிமாவுக்கு வந்தா, ஒரு ரவுண்டு வருவே'' என்று உறுதியாகச் சொன்னார். ஆனால், பெற்றோர் தான் மகளை மருத்துவராக்கிப் பார்க்கும் விருப்பத்தில் இருந்தார்கள்.

இந்த சமயத்தில், டாக்டரும் பட அதிபருமான காரிகாபட்டி ராஜாராவிடம் மகளை அழைத்துச் சென்று, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து, ''என்ன செய்வது?'' என்று ஆலோசனை கேட்டார்கள். ''இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்காளே. முக்கியமா, இவளோட கண்ணு கொள்ளை அழகு. இவ பாதி நடிச்சாப்போதும்; மீதியை அவ கண்ணே நடிச்சிரும்'' என்று சொன்னார். 'மா பூமி' எனும் தன்னுடைய நாடகத்தில் நாயகியின் சகோதரி வேடத்தில் நடிக்க வைத்தார் ராஜாராவ். எல்லோரும் ஹீரோயினை மறந்தே போனார்கள்; ஜமுனாவின் நடிப்பையும் அவரின் அழகையும் கண்களையும் கண்டு பாராட்டினார்கள்.

அதேசமயத்தில், காரிகாபட்டி ராஜாராவ், ஜமுனாவை வித விதமாகப் புகைப்படங்களை எடுத்தார். இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருந்த தன் நண்பர் வி.என்.ரெட்டிக்கு அனுப்பி வைத்தார். புகைப்படங்களைப் பார்த்ததும் மலைத்துப் போன ஒளிப்பதிவாளர், ''நான் எடுக்கும் படத்தில் நாயகியாக்குகிறேன்'' என்று தந்தி கொடுத்தார். ஆனால், காரிகாபட்டி ராஜாராவிடம் இருந்தும் ஜமுனாவின் பெற்றோரிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து, ''இவள் சாதாரண ஆளில்லை. ஆந்திராவின் நர்கீஸாக வலம் வருவாள்'' என்று காரிகாபட்டி ராஜாராவ் தந்தி அனுப்பினார்.

1953-ல் காரிகாப்பட்டி ராஜாராவ், தான் தயாரித்த 'புட்டிலு' எனும் திரைப்படத்தில் ஜமுனாவை அறிமுகப்படுத்தினார். படம் நன்றாக ஓடியது. ஜமுனாவை எல்லோரும் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து படங்கள் வரத்தொடங்கின. தமிழில் 54-ம் ஆண்டில் 'பணம் படுத்தும் பாடு' எனும் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். படம் சுமாராகப் போனாலும் ஜமுனாவை தமிழ்த் திரையுலகம் கொண்டாடியது. அந்தக் காலத்திலேயே மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படம் நகைச்சுவைப் படம். சவுகார் ஜானகிதான் நாயகி. இரண்டாவது நாயகியாக ஜமுனா நடித்தார்.

நாகேஸ்வர ராவ், என்.டி.ஆர். என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார் ஜமுனா. தமிழில் நடிக்க நேரம் ஒதுக்கவே பெரும்பாடுபட்டார். தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். சிவாஜியுடன் 'தங்கமலை ரகசியம்' படத்தில் நடித்தார். அவரின் கண்கள் நடித்துச் ஜொலித்தன.

'அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ' பாட்டும் ஜமுனாவின் கண்களும் அழகும் பேசப்பட்டன. எம்ஜிஆருடன் 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி'யில் நடித்தார். சிவாஜியுடன் 'நிச்சயதாம்பூலம்' படத்தில் நடித்தார். 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது' என்ற பாடலைக் கொண்ட இந்தப் படமும் ரொம்பவே பேசப்பட்டது.


எல்.வி.பிரசாத் இயக்கிய மிகப்பெரிய வெற்றிப்படம் 'மிஸ்ஸியம்மா'. ஜெமினியும் சாவித்திரியும் நடித்தார்கள். சாவித்திரி, எல்.வி.பிரசாத்திடம் பேசி, இன்னொரு நாயகியின் கதாபாத்திரத்தை ஜமுனாவுக்கு வாங்கிக் கொடுத்தார். படம் அடைந்த வெற்றி, இன்னுமொரு உயரத்துக்கு ஜமுனாவைக் கொண்டு சென்றது.

தெலுங்கில் இன்னும் பல படங்கள் கிடைத்தன. ஏவி.எம். தயாரிப்பில் ஜெய்சங்கருடன் இவர் நடித்த 'குழந்தையும் தெய்வமும்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்' என்று ஜமுனாவின் கண்களை மையப்படுத்தியே பாடலின் முதல் வரி எழுதப்பட்டது. மிகச்சிறந்த நடிகை என்று எல்லோரும் ஜமுனாவைக் கொண்டாடினார்கள்.

பிறகு, ஆந்திரமே உலகம் என்றாகிப் போனார். வரிசையாகப் படங்கள். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு, அதே ஏவி.எம். தமிழுக்கு ஜமுனாவை மீண்டும் அழைத்துவந்தது. கமல் இருவேடங்களில் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமலின் அம்மாவாக நடித்தார். 'நானாக நானில்லை தாயே' என்ற பாடலையும் கமலையும் ஜமுனாவையும் மறக்கவே முடியாது.


கண்ணியத்துடன் நடிப்பார் ஜமுனா. கிளாமராக நடிக்க மாட்டார். அவரின் கண்களில் அப்படியொரு ஜோதி ஒளிர்ந்துகொண்டே இருக்கும் என்றெல்லாம் பத்திரிகைகள் ஜமுனாவை எழுதிப் போற்றின. 1936-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்த நடிகை ஜமுனா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் 2023-ம் ஆண்டு, ஜனவரி 27-ல் தனது 87-வது வயதில் காலமானார்.

ஆந்திராவின் நர்கீஸ் என்று கொண்டாடப்பட்ட ஜமுனாவின் அந்த 'மான்விழிக் கண்கள்' ஓய்வு பெற்றுக் கொண்டன! அமுதைப் பொழியும் நிலவு, அருகில் இருந்தது போதுமென்று விண்ணுக்குப் பயணித்து விட்டது!

Updated On: 28 Jan 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!