எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
X

பைல் படம்.

நாடக நடிகர்கள் தென் தமிழகத்தில் நிறையவே இருந்ததால் மதுரையில் ‘தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்’ என்கிற பெயரில் சுண்ணாம்புக்காரத் தெருவில் ஒரு சங்கம் இருந்தது. நாடகத்தில் நடிக்க கலைஞர்களை ‘புக்’ பண்ணுகிற அலுவலகமாகவும், நிர்வகிக்கிற சங்கமாகவும் இருந்தது. இதில் எம்.எம்.மாரியப்பா, உடையப்பா போன்ற பல முன்னணி நாடகக் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் திரையுலகில் வளர்ந்து வந்த எம்.ஜி.ஆருக்கும் நல்ல தொடர்புகள் இருந்தன. தனது இல்லத்திற்கு அங்குள்ள நடிகர்கள் வருகை தந்தபோதெல்லாம் அன்புடன் வரவேற்று உபசரித்திருக்கிறார்கள்.

‘தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களை எடுத்த இயக்குநரான கே.சுப்பிரமணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்கிற அமைப்பை ஆரம்பித்தபோது அதில் பல மொழிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அதில் அக்கறை எடுத்துக் கொண்ட இன்னொரு முக்கியமான கலைஞர் கலைவாணர். அவருடைய பங்களிப்பு பற்றி அவருடைய மருமகளான பேராசிரியை பொற்கொடி நல்லதம்பி எழுதிய ‘சமூக விஞ்ஞானி’ என்ற நூலில் இப்படி எழுதியிருக்கிறார்.

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒப்புயர்வற்ற தலைவர் என்.எஸ்.கிருஷ்ணன். நடிகர்கள் கொள்கைகள் அற்றவர்கள் அல்லர். மக்களின் உணர்ச்சிகளை அறியாதவர்கள் அல்லர். குறிக்கோளும், கொள்கையும் உடையவர்கள் என்ற கொள்கைக் குரலை தென்னிந்தியர் நடிகர் குரலாக உயர்த்தியவர்’’.

கோடம்பாக்கத்திலும், கோவையிலும், சேலத்திலும் அப்போது இயங்கி வந்த ஸ்டூடியோக்களில் தமிழ்ப்படங்கள் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பன்மொழிப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அந்தப் படங்களை நம்பி நிறையத் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்காகத் துவக்கப்பட்டது தான் ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’.

அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேவை அந்த அமைப்புக்கு இருந்தது. “என்னைப் போன்றவர்கள் அதில் சேரலாமா?’’ என்று எம்.ஜி.ஆர் அன்று எழுப்பிய கேள்வி தான் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானதற்கான அஸ்திவாரம். இப்படித்தான் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட்டது. அதற்கான நன்கொடையாக முதலில் எம்.ஜி.ஆர் தந்தது 501 ரூபாய்.

அப்போது தான் மருதநாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வாதிகாரி படங்களுக்குப் பிறகு அந்தமான் கைதி, என் தங்கை போன்ற படங்கள் வெளிவந்து அவரை உயர்த்தின.

அடுத்த ஆண்டு அந்தச் சங்கத்திற்கு அவர் தான் துணைத்தலைவர். 1954 ல் அவர் பொதுச்செயலாளர். ‘மலைக்கள்ளன்’ படம் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருந்த நேரம் அது. தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட்டபோது அதற்கென தனிக்கட்டிடம் இல்லை.

அதற்காக சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் நடிகர் சங்கத்திற்கென ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். பல மொழி நடிகர்களும் அதில் உறுப்பினர்கள் ஆனார்கள். சங்கத்தில் சேர உறுப்பினர் கட்டணமும், ஆண்டுச் சந்தாவும் வசூலிக்கப்பட்டன. முதலில் சந்தா ஒன்றரை ரூபாயாக இருந்து பிறகு ஐந்து ரூபாயாக மாறி, பதினொரு ரூபாயாக மாறியது.

அதைத்தர இயலாத நிலையில் பல நடிகர்கள் இருப்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர், அவர்களுக்காகத் தன்னுடைய பணத்தைச் செலுத்தக்கூடிய அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார். ஓரிரு காட்சிகளில் நடிக்கிறவர்களையும் ஒதுக்காமல் சங்கத்தில் உறுப்பினர்களாக்கினார். சங்கத்திற்கென கூட்டங்கள் நடக்கும். அதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் எம்.ஜி.ஆர் நடிகர் சங்கத்திற்காக ஒரு இலச்சினையை உருவாக்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிக் கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் விதத்தில், நான்கு குழந்தைகளை ஒரு தாய் அரவணைக்கிற மாதிரியான இலச்சினை உருவாவதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்.

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அஞ்சலிதேவியும் சிறிதுகாலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் பல விழாக்கள் நடந்தன. போட்டிகள் நடந்தன. எல்லாவற்றிலும் கலந்து கொண்டு தனிக்கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர்.

அந்த விழாக்களில் எம்.ஜி.ஆருடன் கன்னட நடிகர் ராஜ்குமார், மலையாள நடிகர் பிரேம்நசீர், எம்.கே.ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். எந்த மொழி பேதத்தையும் பார்க்காமல் நடிப்பு என்கிற ஒற்றை மையத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கிற அமைப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியபோது எம்.ஜி.ஆருக்கு முன்னிருந்த இலக்குகள் இரண்டு. ஒன்று நடிகர் சங்கத்திற்கென்று தனிக்கட்டிடம். மற்றொன்று நடிப்புக் கலைஞர்களுக்கு என்று தனிக்காலனி.

நடிகர் சங்கத்திற்கென்று தன்னுடைய வீட்டிலேயே இடம் அளித்த எம்.ஜி.ஆர், அதை விரிவுபடுத்த சென்னையில் சில இடங்களைப் பார்த்தபோது அவரிடம் சொல்லப்பட்டது தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் இருந்த நிலம். சுமார் இருபது கிரவுண்ட் நிலம். அந்த இடத்தின் அப்போதைய மதிப்பு 75 ஆயிரம் ரூபாய். அந்த இடத்தை அப்போது வாங்க இருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் முயற்சியை அறிந்து அந்த நிலத்தைக் கொடுக்க முன்வந்தார்.

திரைக்கலைஞர்களிடம் நிலத்தை வாங்குவதற்காக நிதி திரட்டியபோது 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரண்டது. மீதமுள்ள நாற்பதாயிரம் ரூபாயை தான் நடித்துக் கொண்டிருந்த படங்களுக்கான முன்பணத்தைப் பெற்று உதவினார் எம்.ஜி.ஆர். அந்த இடத்தில் போடப்பட்ட கொட்டகையில் தான் இயங்கியது தென்னிந்திய நடிகர் சங்கம். முதலில் பொதுச்செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர், 1961 ல் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

அப்போது அரசு விருது பெற்ற திரைக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். கே.பி.சுந்தராம்பாளுக்கு தமிழக அரசு விருது அளித்ததைப் பற்றி அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

“கே.பி.எஸ் சேலத்தில் நடந்த பொருட்காட்சியில் நாடகத்தில் நடிக்கச் சென்றிருந்தார்கள். ‘தமிழக அரசு உங்களைப் பாராட்டிக் கேடயம் வழங்குகிறது. அதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவிலும், விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தந்தி கொடுத்தேன்’’. நடிகர் சங்கத்திற்காகக் கட்டிடம் கட்ட முடிவெடுத்தபோது உதவியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். அவர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது பாட்டுப்புத்தகம் விற்ற தன்னுடைய வாழ்க்கையை விவரித்துப் பேசினார் வாசன்.

அதே விழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு பேசும்போது “நடிப்பு ஒரு தொழில். இந்தத் தொழில் செய்பவர்களுக்கு எல்லாவித வளர்ச்சியும் வேண்டும். எந்தத் தொழில் செய்வருக்கும் ஓய்வு ஊதியம் இருப்பது மாதிரி, இந்தத் தொழிலுக்கும் வேண்டும். வளர்ந்தவர்கள் மனிதாபிமானத்தில், வளராதவர்களை ஆதரிக்க வேண்டும்’’ என்றார். சங்கக் கட்டிடம் உருவாவதற்குள் பல குழப்பங்கள். பூசல்கள். அதனால் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து விலகி இருந்தபோது கூட அவர் சொன்னார். “நான் பலன் பார்த்து இதை ஆரம்பிக்கவில்லை. வருபவர்கள் கலைக்கு மதமில்லை, மொழியில்லை என்ற நோக்கில் வாழட்டும். என்னை மறந்தாலும், நான் அமைத்த சின்னத்தை மறக்காமல் இருக்கட்டும்’’ என்று சொல்கிற அளவுக்கு அவர் நடிகர் சங்கத்தின் மீது பாசத்துடன் இருந்தார்.

1977 ல் எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக ஆனதும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் சிவாஜி கணேசன். பொதுச்செயலாளராக இருந்தவர் மேஜர் சுந்தரராஜன். எம்.ஜி.ஆரிடம் ஆலோசனை பெற்று, வங்கியில் கடன் பெற்று 1978 ல் உருவானது தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம். அதைத் திறந்து வைத்தவர் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

கலைவாணர் துவங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, விஜயகாந்த், ராதாரவி, சரத்குமார் என்று பலருடைய பங்களிப்புடன் இயங்கியிருக்கிற தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென அப்போது இருந்த பத்திரிகை ‘நடிகன் குரல்’.

‘கலைமாமணி விருது’ தமிழக அரசால் வழங்கப்படுவது மாதிரியே நடிகர் சங்கத்தால் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருது ‘கலைச்செல்வம்’.

மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைக்கலைஞர்கள் தங்களுக்கென்று தனி சங்கங்களைக் கொண்டிருந்தாலும், சென்னையில் இயங்கும் மூத்த சங்கமான ‘தென்னிந்திய நடிகர்கள் சங்கம்’ என்கிற பெயர் மாற்றப்படாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம்?

அரசியலில் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தை ஒருங்கிணைத்து உருவாக்க நினைத்த திராவிட உணர்வின் அடையாளமாக, இன்னும் தமிழகத்தில் உள்ள இயக்கங்களின் பெயர்களில் திராவிடம் என்கிற பெயர் நீடித்துக் கொண்டிருப்பது மாதிரியே, திரைத்துறையிலும் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்கிற பெயர் நீடித்திருந்திருக்கலாம்.

இன்றைக்கு நடக்கிற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் நோக்கங்கள் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடிகர் சங்க உருவாக்கத்தில் திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பொதுவுடமை இயக்கம் என்று பல அரசியல் ஈடுபாடுடைய கலைஞர்கள் இருந்தாலும், நடிகர் சங்கத்தின் பார்வையிலும், செயல்பாட்டிலும் அரசியல் நோக்கங்களில்லை. நாடகமேடைக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள் என்கிற பாகுபாடுகள் இல்லை. அதை மீறிய நடிப்புணர்வும், ஒற்றுமையுணர்வும் தான் நடிகர் சங்கத்திற்கு மரியாதையையும், மதிப்பையும் உருவாக்கித் தந்தது.

Updated On: 1 April 2023 5:00 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  ஷாலினி இருக்கவேண்டிய இடத்தில் இன்னொரு நடிகை! அஜித் ரசிகர்கள்...
 2. லைஃப்ஸ்டைல்
  dried gooseberry-உலர் நெல்லியில் இவ்ளோ நன்மைகளா..? தெரிஞ்சுக்கங்க..!
 3. நாமக்கல்
  மேகாதாதுவில் அணை: கர்நாடகா துணை முதல்வர் வீட்டு முன்பு முற்றுகைப்...
 4. சினிமா
  சமந்தா நடிக்கும் ஹாலிவுட் படம்! இப்படி ஒரு விசயம் இருக்கா இதுல?
 5. சினிமா
  Maamannan Audio Launch-நாளை மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா
 6. டாக்டர் சார்
  dydroboon tablet uses in tamil காய்ச்சல் மற்றும் வலி நிவாரணங்களுக்கான...
 7. லைஃப்ஸ்டைல்
  earth to sky distance பூமியிலிருந்து வானம் எவ்வளவு துாரத்தில் ...
 8. டாக்டர் சார்
  dulcoflex medicine uses-டல்கோஃப்ளெக்ஸ் மருந்து முதன்மையாக எதற்கு...
 9. டாக்டர் சார்
  dydroboon tablet in pregnancy கர்ப்பிணிகள் இந்த மாத்திரையினை ...
 10. சினிமா
  துருக்கியில் விஜய்! ஊர் சுற்றும் சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்!